Published : 14 Jun 2021 03:13 AM
Last Updated : 14 Jun 2021 03:13 AM
விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம் மரக்கா ணம் தொடங்கி கோட்டக்குப்பம் வரையிலும், அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டம் வரை சுமார் 107 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கான திட்டத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பூர்வாங்க பணி களை தொடங்கியது.
அப்போது, விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக மற்றும் தோழமை கட்சிகளை இணைத்தும் விவசாயிகளை திரட்டியும், மக்களிடம் தொடர் பிரச்சாரம், கண்டன பொதுக்கூட்டங்களை, போராட்டங்களை நடத்தினோம். கடந்த 2019 ஜுலை 16-ல்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை யில் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இதையடுத்து ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த சூழலில் தற்போது மத்திய அரசு மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு சர்வதேச ஒப்பந்தத்தை கோரியுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பாலைவனமாக மாறி விடக்கூடிய ஆபத்து உள்ளது. கடற்பகுதி மீன்வளம் அழிந்து போகும், கடற்கரையோர கிராமங்களிலுள்ள மீனவர்கள் வெளியேற்றப்படும் நிலைமை ஏற்படும்.
எனவே மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். அது நடைமுறைப்படுத்தினால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒத்த கருத்துள்ள கட்சிகளை திரட்டி விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து தொடர் போராட் டங்களை நடத்தும் என்று தெரி வித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT