Published : 25 Dec 2015 09:22 AM
Last Updated : 25 Dec 2015 09:22 AM
தேர்தல் பணியின் முன்னோட்டமாக மதுரையில் ஒரு லட்சம் வீடுகளுக்கு திமுகவினர் காலண்டர்களை இலவச மாக வழங்கினர். தமிழகம் முழுவதும் காலண்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. தேர்தல் பணிக்குழு, வாக்குச்சாவடி வாரியாக முகவர்களை நியமிப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை ஏற்கெனவே முடித்துவிட்டனர். தேர்தல் வெற்றியைக் கணக்கிட்டு வாக்காளர் களை தங்களுக்கு ஆதரவாக திருப்புவது, மாற்றுக்கட்சியினர் உட்பட பலரை தங்கள் கட்சியில் சேர்ப்பதில் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மதுரையில் கடந்த மே மாதம் ‘மக்கள் ஓரணி, கேள்வி கேட்கும் பேரணி’ என்ற தலைப்பில் திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் கூட்டம் நடைபெற்றது. இதிலிருந்தே மதுரை புறநகர் மாவட்ட திமுகவினர் தேர்தல் பணியில் வேகம் காட்டத் தொடங்கினர். ஒவ்வொரு தொகுதிக்கும் 4 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மற்ற மாவட்டத்தினருக்கு முன்மாதிரியாக விரைந்து முடித்தனர்.
தேர்தல் பணியின் முன்னோட்டமாக வாக்காளர்களிடம் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் காலண்டர்களை இலவசமாக வழங்கத் திட்டமிட்டனர். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி முதல்கட்டமாக மதுரை கிழக்குத் தொகுதியில் உள்ள ஒரு லட்சம் வீடுகளுக்கு காலண்டர்களை வழங்கத் திட்டமிட்டார். இப்பணியில் திமுகவில் வாக்குச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்ட முகவர்கள் பயன் படுத்தப்பட்டனர். இவர்கள் மூலம் காலண்டர்கள் வழங்கப்பட்டன.
மதுரை கிழக்கு ஒன்றியத்துக்கு 40 ஆயிரம், மேற்கு ஒன்றியத்துக்கு 30 ஆயிரம், ஆனையூர் பகுதிக்கு 20 ஆயிரம், மேலமடைக்கு 10 ஆயிரம் என ஒரு லட்சம் காலண்டர்கள் வழங்கப்பட்டன. இந்த காலண்டர்களை வீடு வீடாக சென்று கட்சியினர் வழங்கினர்.
இதுகுறித்து கட்சியினர் கூறிய போது, ‘திமுக காலண்டரை அனை வரும் வேண்டாம் என்று கூறாமல் பெற்றுக்கொண்டதால் தேர்தல் பணிக் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் குடும்பத்தினரை தொடர்புகொள்வது எளிதானதுதான் என்பதைப் புரிந்து கொண்டோம். இதன் தொடர்ச்சியாக தொகுதியிலுள்ள முக்கியமான பிரமுகர்களுக்கு டைரிகள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்’ என்றனர்.
மதுரையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் சார்பில் வீடுதோறும் காலண்டர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT