Published : 13 Jun 2021 06:23 PM
Last Updated : 13 Jun 2021 06:23 PM
டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“டெல்டா மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையிலுள்ள வடதெரு என்ற கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஏல அறிவிக்கையினை மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 10.6.2021 அன்று வெளியிட்டுள்ளது. இதனை உடனடியாக நிறுத்தவேண்டுமென வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதம்:
“தொன்றுதொட்டுத் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும் காவிரிப் படுகை விளங்கி வருகிறது. "சோழ நாடு சோறுடைத்து" என்ற சொல் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்று. இத்தனை பெருமை கொண்ட காவிரிப் படுகை பகுதியையும், அதனைச் சார்ந்திருக்கும் விவசாயப் பெருமக்களின் நலனையும் பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.
நேற்றைய தினம், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கி, அப்பணிகளைத் துரிதப்படுத்த அரசு ஆணையிட்டுள்ளதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஜூன் 10 அன்று ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோகார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களைச் செயல்படுத்த ஏலம் விடுவதாக ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிவிக்கையில், காவிரிப் படுகை பகுதியில் வடதெரு என்ற பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் உற்பத்திக்காக ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரிப் படுகை பகுதியிலுள்ள விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், இந்தப் படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது தமிழக அரசின் உறுதியான கொள்கையாகும்”.
இக்காரணங்களை எடுத்துக்காட்டி, மேற்குறிப்பிட்ட ஏலத்திலிருந்து வடதெரு பகுதியை நீக்க வேண்டுமென்றும், எதிர்காலங்களில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும், பிரதமருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன்.
மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளைத் தமிழக அரசு ஒருபோதும் வழங்காது என்றும், தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் "கண்ணை இமை காப்பது போல" எங்கள் அரசு காக்கும் என்றும் உறுதிபடக் கூற விரும்புகிறேன்”.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT