Published : 27 Jun 2014 03:42 PM
Last Updated : 27 Jun 2014 03:42 PM

ஒரே நாளில் முடிவுக்கு வந்த கரும்பு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்

கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய பாக்கி தொகையை 20 நாட்களுக்குள் அளித்து விடுவதாக திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து, கரும்பு விவசாயி களின் காத்திருப்பு போராட்டம் ஒரே நாளில் விலக்கிக் கொள்ளப் பட்டது.

திருத்தணி, ஆர்.கே.பேட்டை, சாலை, அத்திமாஞ்சேரி ஆகிய நான்கு கோட்டங்களில் உள்ள கரும்பு விவசாயிகளில் 50 சதவீதத் துக்கும் மேற்பட்டோர், திருத் தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தாங்கள் அறுவடை செய்த கரும்புகளை அனுப்பிவருகின்றனர். அப்படி அனுப்பப்படும் கரும்புகளுக்குரிய பணத்தை ஆறு மாதங்களாகியும் ஆலை நிர்வாகம் அளிக்காமல் இருந்து வருகிறது.

எனவே, கரும்பு விவசாயி களுக்கு அளிக்க வேண்டிய பாக்கி தொகையை உடனே அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு காத்திருக்கும் போராட்டம் வியாழக்கிழமை காலை தொடங்கியது.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் ரவீந்திரன், மாவட்ட செயலர் துளசிநாராய ணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்ட கரும்பு விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதையடுத்து, சர்க்கரை ஆலை நிர்வாகம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், முதல் கட்டமாக 29 விவசாயிகளுக்கு அளிக்க வேண் டிய 12 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இன்னும் நான்கு நாட்களில் 4 கோடி ரூபாயும், அதற்கடுத்த 15 நாட்க ளில் 20 கோடி ரூபாயும் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித் தது திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம்.

மேலும், அரசு அறிவிப்பின்படி, ஒரு டன் கரும்புக்கு ரூ. 2,550 அளிக்கப்படும் எனவும், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் அரவை திறன் கொண்ட ஆலையாக திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை தரம் உயர்த்தப்படும் என்றும், கரும்பு சக்கையிலிருந்து மின்சாரம் தயாரிக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம் என்றும் ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கரும்பு விவசாயி களின் காத்திருப்பு போராட்டம் மாலையில் நிறைவுக்கு வந்தது. பல நாட்கள் தொடர இருந்த போராட்டம் ஒரே நாளில் விலக்கிக் கொள்ளப் பட்டது குறிப்பிடத்தக்கது.

கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய பாக்கி தொகையை உடனே அளிக்கக் கோரி திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் நடந்த கரும்பு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x