Published : 12 Jun 2021 04:57 PM
Last Updated : 12 Jun 2021 04:57 PM
பெண் காவலரின் பாலியல் குற்றச்சாட்டு புகாரைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (கூடுதல் எஸ்.பி) பணியாற்றி வருபவர் சார்லஸ். இவர், இதற்கு முன்னர், ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பியாக பணியாற்றி வந்தார்.
அப்போது, அங்கு பணியாற்றிய பெண் காவலரிடம், கூடுதல் எஸ்.பி. சார்லஸ், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண் காவலர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்,புகார் அளித்தார். இது தொடர்பாக, அப்போதைய கோவை சரக டிஐஜி, ஐஜி உள்ளிட்டோர் விசாரித்தனர். புகார் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஈரோட்டில் இருந்து பணியிடம் மாற்றப்பட்ட, கூடுதல் எஸ்.பி. சார்லஸ் நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். இவர் மீதான புகார் தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்தது.
இந்த விசாரணை அறிக்கை, மேற்கு மண்டல காவல்துறை அதிகாரிகள் மூலம், காவல்துறை இயக்குநர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூடுதல் எஸ்.பி சார்லஸை பணியிடை நீக்கம் செய்து, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் நேற்று (மே 11) உத்தரவிட்டார்.
இந்த பணியிடை நீக்க உத்தரவு, கோவை சரக டிஐஜி முத்துசாமி வாயிலாக, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் கூடுதல் எஸ்.பி. சார்லஸிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போது பணிபுரியும் இடத்திலேயே கூடுதல் எஸ்.பி. சார்லஸ் தங்கியிருக்க வேண்டும். அரசு அனுமதியில்லாமல், வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள கூடுதல் எஸ்.பி. சார்லஸ் பொள்ளாச்சி, பவானி உள்ளிட்ட இடங்களில் டிஎஸ்பியாகவும், கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT