Published : 12 Jun 2021 04:51 PM
Last Updated : 12 Jun 2021 04:51 PM
மருத்துவமனைகளில் பணிபுரிய அளிக்கப்படும் இலவச வேலைவாய்ப்பு பயிற்சிக்கு, 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் இன்று (ஜூன் 12) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"பேரிடர் காலத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத்துறையில் பணியாற்ற குறுகிய கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது.
கோவை - மருதமலை சாலையில், கல்வீரம்பாளையத்தில் உள்ள ஆறுதல் பவுண்டேசன் வளாகத்தில் வழங்கப்படும் இப்பயிற்சி வகுப்பானது, 21 நாட்கள் வகுப்பறையிலும், அதைத்தொடர்ந்து 3 மாதங்கள் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் வேலைக்கான பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சி பெறும் நபர்களுக்கு பயிற்சி காலத்தில் இலவச பயண அட்டை, கரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள், தடுப்பூசிகள் போன்றவை வழங்கப்படும்.
எனவே, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட ஆர்வமுள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் கல்வித் தகுதியுடன் 18 வயது பூர்த்தியடைந்துள்ள ஆண்கள், பெண்கள் தங்களது கல்வித் தகுதி தொடர்பான அசல் ஆவணங்கள் மற்றும் ஆதார் விவரங்களுடன் ஆறுதல் பவுண்டேஷன் திறன் பயிற்சி வழங்கும் மையத்தை 8870770882, 9080348505 என்ற செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம். அதோடு, மாவட்ட திறன்மேம்பாட்டு பயிற்சி அலுவலகத்துக்கு dad.tncbe@gamil.com தகவல்களை மின்னஞ்சல் அனுப்பலாம்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT