Published : 12 Jun 2021 03:58 PM
Last Updated : 12 Jun 2021 03:58 PM

தமிழ் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும்: 'இசையின் இசை' நூல் வெளியீட்டு விழாவில் ராமதாஸ் பேச்சு

காணொலிக் காட்சி வாயிலாக பேசிய ராமதாஸ்.

சென்னை

தமிழ் இசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய 'இசையின் இசை' என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 12) சனிக்கிழமை இணையவழியில் நடைபெற்றது.

சமூக முன்னேற்ற சங்க பதிப்பகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவில், ராமதாஸ் எழுதிய 'இசையின் இசை' நூலை புகழ்பெற்ற பாடகர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் வெளியிட்டார். மக்கள் இசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் முதல்படியை பெற்றுக் கொண்டார்.

நூல் வெளியீட்டு விழாவில் ராமதாஸ் பேசியதாவது:

"இசை தமிழர்களின் வாழ்க்கையுடன் கலந்தது. விவசாயத்தில் நாற்று நடுதல், களை எடுத்தல், ஏற்றம் இறைத்தல் என, அனைத்துக்கும் தனித்தனி பாடல்கள் உண்டு. தமிழ் இசை தான் உலகின் ஆதி இசை ஆகும்.

ஒரு காலத்தில் எழுச்சி பெற்றிருந்த தமிழ் இசை, 20 ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சி அடைந்த போது தமிழ்நாட்டில் இருவருக்கு மட்டும் தான் கோபம் ஏற்பட்டது. ஒருவர் ராஜா. சர். அண்ணாமலை செட்டியார், இன்னொருவர் பின்னாளில் இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராக பதவி வகித்த ஆர்.கே.சண்முகம் செட்டியார்.

அவர்கள் இருவரும் தான் தமிழ் இசை சங்கத்தை உருவாக்கி, தமிழ் இசையை பரப்ப நடவடிக்கை எடுத்தார்கள். தமிழ் இசை விழாவில் பாடுவதற்கு இசைக்கலைஞர்கள் எவரும் வரவில்லை என்றால், நாமே தமிழ் இசை பாடல்களை பாடலாம் என்று துணிச்சலாக அறிவித்தனர். அவர்கள் நடத்திய இசை விழா சிறப்பாக நடைபெற்றது. அதனால் தமிழ் இசை காப்பாற்றப்பட்டது.

தமிழ் இசையை அடித்தட்டு மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் 2003 ஆம் ஆண்டு பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை, 2005 ஆம் ஆண்டில் பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றம் ஆகியவற்றை உருவாக்கி, அவற்றின் மூலம் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு பொங்குதமிழ் பண்ணிசைப் பெருவிழாக்களை தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நடத்தினோம். இந்தப் பணியில் எனக்கு உறுதுணையாக இருந்தவர் மூத்த பத்திரிகையாளர் ஜே.வி.கண்ணன் ஆவார்.

சங்க இலக்கியங்களில் தமிழ் இசை பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. சிலப்பதிகாரத்தில் 103 பண்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பரிபாடலில் தமிழிசை பாடல்கள் ஏராளமான உள்ளன. தமிழ் இசையை குழந்தைப் பருவத்திலிருந்தே படிக்க வேண்டும். அதற்காகத் தான் பள்ளிகளில் தமிழ் இசையைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று முந்தைய திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன்.

அதுவும் தமிழ் இசைப் பாடத்திற்கு தேர்வு வைத்து அந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் தான் அவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஆனால், அந்தக் கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டில் எங்கும் தமிழ்... எதிலும் தமிழ் என்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் எங்கு தமிழ் இருக்கிறது? தமிழ் எங்கிருக்கிறது என்பதை காட்டினால் பரிசு வழங்குவதற்கு தயாராக இருக்கிறோம். தமிழ்த் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடியும். அந்த அளவுக்கு ஆங்கிலக் கலப்பு உள்ளது. இடையிடையே, ஏதோ இரு வார்த்தைகள் தமிழ் வரும். அதை ஏதோ நமக்கு தெரியாத வார்த்தை என்று நினைத்து ஒதுக்கிவிட வேண்டியது தான்.

அதை மாற்றுவதற்காகத் தான் தனித்தமிழுடன் மக்கள் தொலைக்காட்சியை தொடங்கி நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் தமிழை வளர்ப்பதற்காக என்னென்னவோ செய்தோம். மக்கள் தொகைக்காட்சி, தமிழ் ஓசை நாளிதழ்களில் தனித்தமிழ் சொற்களைப் பயன்படுத்தினோம். ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளை அமைத்து அவற்றில் தனித்தமிழ் சொற்களை எழுதி வைத்தோம். தனித்தமிழ் சொற்களை மட்டுமே வசனமாக பேசும் வகையில் இலக்கணம் என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டோம்.

மார்கழி இசை விழாக்களில் தமிழிசை முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறது. இசைவிழாக்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கலந்துகொண்டால் கூட பிறமொழி பாடல்களைத் தான் பாடுகிறார்கள். கேட்டால் தமிழில் பாடுவதற்கு பாடல்கள் இல்லை என்று கூறுகிறார்கள். அவ்வாறு தமிழில் பாடாமல் பிற மொழி பாடல்களை பாடுவது பிச்சை எடுப்பதற்கு சமம் என்று பாரதிதாசன் விமர்சிக்கிறார். தமிழியக்கம் என்ற தலைப்பில் அவர் இதுகுறித்து அவர் எழுதிய கவிதை:

"நாயும் வயிற் றைவளர்க்கும்; வாய்ச்சோற்றைப் பெரிதென்று நாட லாமோ?
போய்உங்கள் செந்தமிழின் பெருமையினைப் புதைப்பீரோ பாட கர்காள்!
தோயுந்தேன் நிகர்தமிழாற் பாடாமே தெலுங்கிசையைச் சொல்லிப் பிச்சை
ஈயுங்கள் என்பீரோ? மனிதரைப்போல் இருக்கின்றீர் என்ன வாழ்வு!

செந்தமிழில் இசைப்பாடல் இல்லையெனச் செப்புகின்றீர் மான மின்றிப்
பைந்தமிழில் இசையின்றேல் பாழுங்கிணற்றில் வீழ்ந்துயிரை மாய்த்த லன்றி
எந்தமிழில் இசையில்லை, எந்தாய்க்கே உடையில்லை என்ப துண்டோ ?
உந்தமிழை அறிவீரோ தமிழறிவும் உள்ளதுவோ உங்கட் கெல்லாம்?' என்று பாரதிதாசன் கடுமையாக விமர்சிக்கிறார். ஆனாலும் பயனில்லை.

என்னுடைய ஆசை எல்லாம் தமிழ்நாட்டின் தெருக்களில் தமிழ் இருக்க வேண்டும் என்பது தான். காலம் இப்படியே சென்று விடாது. நிச்சயமாக காலம் ஒரு நாள் மாறும். நாம் அதை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் தழைக்கும் காலம் நம்மால் ஏற்படும்".

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x