Published : 12 Jun 2021 03:38 PM
Last Updated : 12 Jun 2021 03:38 PM

கட்சியை அப்படியே விட்டுவிட மாட்டேன்; தொண்டர்களை விரைவில் சந்திக்கிறேன்: வேலூர் அதிமுக நிர்வாகியிடம் சசிகலா உரையாடல்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்குப் பூங்கொத்து கொடுக்கும் முன்னாள் மாவட்டச் செயலாளர் எல்.கே.எம்.வாசு (கோப்புப்படம்) 

வேலூர்

‘கட்சியை அப்படியே விட்டுவிட மாட்டேன். விரைவில் தொண்டர்களைச் சந்திக்க கண்டிப்பாக வருகிறேன்’ என்று வேலூர் முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளரிடம் சசிகலா பேசும் உரையாடல் பதிவு வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த நிலையில் சமீப நாட்களாக அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசி வரும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் அகில உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளரும் வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளருமான எல்.கே.எம்.பி.வாசுவிடம் சசிகலா பேசிய ஆடியோ இன்று (ஜூன் 12) வெளியாகி அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

எல்.கே.எம்.பி.வாசு கடந்த 2006- 2010 வரை வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதிமுகவில் இருந்து விலகி அமமுகவிற்குச் சென்றவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவிற்குத் திரும்பினார். கடந்த ஜனவரி மாதம்தான் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

சீக்கிரம் தொண்டர்களைச் சந்திக்கிறேன்

எல்.கே.எம்.பி.வாசுவைச் சசிகலா தொடர்புகொண்டு பேசும் சுமார் 5 நிமிடங்கள் கொண்ட ஆடியோவில் ஆரம்பத்தில் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து, மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறித்துப் பேசிக்கொண்டனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வாசு: ‘‘அம்மா நீங்கதான் வரணும். பேரறிஞர் அண்ணா தம்பி வா, தலைமை ஏற்க வா என்று நாவலரைப் பார்த்து அழைத்த மாதிரி, இன்றைய காலகட்டத்துக்கு அம்மா வாங்க. தலைமை ஏற்க வந்தால்தான் அம்மா கண்ட ஆட்சியைக் கொண்டுவர முடியும்’’.

சசிகலா: ‘கட்டாயம் வருகிறேன்’.

வாசு:‘‘இந்தக் கட்சி என்ன நிலையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. அம்மா காலத்திலும் தலைவர் காலத்திலும் தலைமைக்குக் கட்டுப்பட்டு தொண்டர்கள் இருந்தார்கள். இப்போது, கட்டுக்கோப்பு இல்லாமல் இருக்கிறது. மந்திரி, மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ எல்லாம் குறு நில மன்னர்கள் மாதிரி செயல்படுகிறார்கள். தொண்டர்களை மதிப்பதில்லை’’.

சசிகலா: ‘‘தொண்டர்கள்தான் முக்கியம் கட்சிக்கு. அதுதான் நம்ம கட்சியோட வழக்கம்’’.

வாசு: ‘‘மாவட்டச் செயலாளர், மந்திரிக்குக் கட்டுப்பட்டு எடப்பாடி செயல்படுகிறார். இப்போது தலைகீழாக மாறிவிட்டது’’.

சசிகலா: ‘‘கவலைப்படாதீங்க வாசு. நிச்சயமாக வருகிறேன். தொண்டர்கள் குமுறல் தாங்க முடியல. நான் விரைவில் தொண்டர்களைச் சந்திக்கிறேன்.

வாசு: ‘‘கட்சி நல்லபடியா வர அம்மா நீங்க வரணும், இது காலத்தின் கட்டாயம்’’.

சசிகலா: ‘‘கட்சியை அப்படியே விடமாட்டேன். தொண்டர்களையும் விடமாட்டேன். நிச்சயம் அம்மா செஞ்ச மாதிரி மக்களுக்கு செஞ்சி நல்ல நிலைக்குக் கொண்டு வந்துடுவேன்’’.

வாசு: ‘‘எந்த ஆட்சி வந்தாலும் எங்க மாவட்டத்துல ஒரு குரூப் இருக்கு’’.

சசிகலா: ‘‘குரூப் என்பதே சரிவராது. அம்மா எப்படி கொண்டு வந்தாங்களோ அந்த மாதிரி கொண்டு வரலாம். 30 ஆண்டுகளாக அம்மா கூடவே இருந்து பார்த்திருக்கிறேன். நிச்சயம் செய்வேன். கவலைப்படாதீங்க. தொண்டர்கள் எல்லாமே முக்கியம். சீக்கிரம் சந்திக்கிறேன்’’.

இவ்வாறு அந்த உரையாடலில் கூறப்பட்டுள்ளது.

கே.சி.வீரமணிக்குப் பதிலடியா?

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலாவின் இந்த உரையாடல் வெளியாகி இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் மட்டத்தில் பேசப்படுகிறது. சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, ‘‘சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். அவர் மீண்டும் கட்சியில் சேர வாய்ப்பே இல்லை. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை. இங்கு கட்சியினரிடம் எந்த சலசலப்பும் இல்லை’’ என்று தெரிவித்திருந்தார்.

அதிமுகவில் மீண்டும் சசிகலா வரக்கூடாது என்று விரும்பும் முன்னாள் அமைச்சர்களில் கே.சி.வீரமணியும் ஒருவர் என்று கூறப்படும் நிலையில் எல்.கே.எம்.பி.வாசுவிடம் சசிகலா பேசிய உரையாடலை அதிமுகவின் தலைமைக்கு மாவட்ட நிர்வாகிகள் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வாசுவை கட்சியில் இருந்து நீக்கவும் ஒரு தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x