Published : 12 Jun 2021 01:54 PM
Last Updated : 12 Jun 2021 01:54 PM
இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால், அவர்களையும் கரோனாவால் உயிரிழந்தவர்கள் பட்டியலில் சேர்த்து இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, எல்.முருகன் இன்று (ஜூன் 12) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் தினமும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட, தமிழக அரசால் கணக்கில் காட்டப்படும் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு நிலவி வந்தது.
இதனை மெய்ப்பிக்கும் வகையில், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால், அவர்களை கரோனாவால் உயிர் இழந்தவர்களாக கணக்கில் காட்டாதது தெரியவந்துள்ளது.
மேலும், இறப்புச் சான்றிதழிலும் அவர்கள் இணை நோய்களால் உயிரிழந்ததாகவே குறிப்பிடப்பட்டு வருகிறது.
இதனால், கரோனாவால், வீட்டில் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்தவரை இழந்த குடும்பங்களும், பெற்றோரை இழந்த குழந்தைகளும், மத்திய, மாநில அரசுகளின் நிவாரணத்தை பெற இயலாத சூழல் நிலவுகிறது. இதனால் அவர்கள் நிர்கதியாக உள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் விதிமுறைகள் படி, இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தால், அவர்களையும் கரோனாவால் உயிரிழந்தவர்கள் பட்டியலில் சேர்த்து இறப்புச் சான்றிதழை வழங்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்றமும் தமிழக அரசின் இந்த தவறான செய்கையை சுட்டிக்காட்டி குட்டு வைத்திருக்கிறது.
எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அரசின் பெயருக்குக் களங்கம் வரக்கூடாது என்பதற்காக, உயிரிழப்புகளை குறைத்துக்காட்ட இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்".
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT