Published : 12 Jun 2021 01:42 PM
Last Updated : 12 Jun 2021 01:42 PM
புதுச்சேரியில் சபாநாயகரை தேர்வு செய்ய 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம், வரும் 16-ம் தேதி கூடுகிறது. இந்த கூட்டமானது காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளதாக பேரவை செயலாளர் முனிசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக கடந்த மாதம் 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். அப்போது அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சகர்கள், சபாநாயகர் பதவிகளை பாஜக கேட்டு வந்தது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது.
இதனிடையே பாஜக மேலிட தலைவர்களோடு முதல்வர் ரங்கசாமி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையில் சமரச தீர்வு ஏற்பட்டது. பாஜகவுக்கு சபாநாயகர் பதவி, 2 அமைச்சர்களை ஒதுக்கீடு செய்து தர ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார்.
அதனை பாஜக ஏற்ற நிலையில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டு வந்த இழுபறி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து சபாநாயகர், அமைச்சர்கள் பட்டியலை பாஜக மேலிடம் ஒப்புதல் தந்து முதல்வர் ரங்கசாமியிடம் ஒப்படைத்தனர்.
இரு கட்சிகளும் புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் பதவிகளை பெறுவதில் இரு கட்சிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே ரங்கசாமி பாஜகவின் தேசிய தலைமையை தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக சபாநாயகர் பெயரை பரிந்துரைத்து கடிதம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சபாநாயகர் பதவிக்கு ஏம்பலம் செல்வத்தின் பெயரை குறிப்பிட்டு பரிந்துரை கடிதம் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து வரும் 16-ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் சபாநாயகர் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(ஜூன் 12) வெளியானது. இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை செயலாளர் முனிசாமி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
‘‘துணைநிலை ஆளுநர் புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை மன்றத்தில் கூட்டப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், துணைநிலை ஆளுநர் வரும் ஜூன் 16-ஆம் தேதியை (புதன்கிழமை) புதுச்சேரி 15-வது மாதம் சட்டப்பேரவையின் பேரவைத்தலைவருக்கான தேர்தல் நடத்தும் தேதியாக நிர்ணயித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் விதி 9(2)-யின் கீழ், நியமனச் சீட்டுக்கள் வரும் ஜூன் மாதம் 15-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நண்பகல் 12 மணி வரை, பேரவைச் செயலாளரால் பெற்றுக்கொள்ளப்படும். பேரவைச் நியமனச் சீட்டுக்களை செயலாளரிடம் பெற்றுக்கொள்ளலாம். நியமனச்சீட்டுக்களை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT