Published : 12 Jun 2021 07:01 AM
Last Updated : 12 Jun 2021 07:01 AM
நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குறு, சிறு நடுத்தர பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டுமென, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் அனுப்பியுள்ள கடிதத்தில், "மத்திய நிதி அமைச்சரின் நிதி சார்ந்த பல்வேறுஅறிவிப்புகள், ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. மூலப்பொருட்கள் விலை, ஜாப்ஒர்க் கட்டணங்கள் உயர்வால் சர்வதேச அளவில்போட்டி தன்மையை எதிர்கொள்வது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. இதனால் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை உருவாகியுள்ளதால் ஆடை உற்பத்தி துறையில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால், வெளிநாட்டு வர்த்தகர் வழங்கிய ஆர்டர் மீதான ஆடை தயாரிப்பை பூர்த்தி செய்வதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட அவசர கால கடன் திட்டம், திருப்பூரில் உள்ள குறு, சிறு, நடுத்தர பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பெருமளவு கைகொடுத்தது. இந்த கடன் திட்டம் வரும் செப். 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியை கருத்தில்கொண்டு, எந்த ஒரு நிபந்தனையும் இன்றி அனைத்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் பழைய கடன்களை மறுசீரமைப்பு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். அதேபோல, மொத்த கடன் நிலுவையில், கூடுதலாக 10 சதவீதம் புதிய கடன் வழங்கி உத்தரவிட வேண்டும்.உலகளாவிய ஆடை வர்த்தகசந்தையில் நிலவும் கடும் போட்டியை எதிர்கொள்ள, அரசின் சலுகைகள் இன்றியமையாததாக உள்ளன. ஆர்.ஓ.டி.டி.இ.பி., சலுகை திட்டத்தில், ஜி.கே.பிள்ளை கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகளை, எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே அமல்படுத்த வேண்டும்.
நிலுவையில் உள்ள சலுகை தொகைகளை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விரைந்து வழங்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனங் களுக்கான வட்டி சமன்பாட்டுதிட்டத்தின் கால அவகாசம், கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது. இந்த திட்டத்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT