Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM

கைத்தறி , பட்டுப் பூங்கா தொடர்பான ஆலோசனை கூட்டம்: காஞ்சிபுரத்தில் ஊரக தொழில் துறை, கைத்தறித் துறை அமைச்சர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூரில் பட்டுப் பூங்கா அமைப்பதற்காக நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வு செய்யும் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அமைய உள்ள கைத்தறி மற்றும் பட்டுப் பூங்காவைசெயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில் 75 ஏக்கர் பரப்பளவில் ரூ.102.83 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும்அண்ணா கைத்தறி, பட்டு பூங்கா செயலாக்கம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த திட்டத் தொகையில் 40 சதவீதம் ரூ.33.53 கோடி மத்திய அரசு மானியமாகவும், 9 சதவீத மதிப்பான ரூ.7.54 கோடி தமிழக அரசு மானியமாகவும், மீதமுள்ள 51 சதவீத மதிப்பான ரூ.61.76 கோடி (வங்கி கடன் உட்பட) தொழில் முனைவோரின் முதலீடாகவும் இருக்கும்.

இந்தப் பட்டு பூங்காவில் கைத்தறி நெசவு, பட்டு சாயமிடல், பருத்தி சாயமிடல், எம்பிராய்டரி மற்றும் கார்மென்டிங் ஆகிய இனங்களில் 82 தொழிற்கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த பூங்காவின் மூலம் கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள், சாயமிடுபவர்கள் மற்றும் கைத்தறிமதிப்பு இணைப்பில் தொடர்புடைய சுமார் 18 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டு பூங்காவை விரைவாக செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும்பட்டுப் பூங்காவில் தற்போதுகட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொழிற்கூடங்களின் நிலை, காஞ்சிபுரம் இந்தியன் வங்கியில் விண்ணப்பித்துள்ள கால கடன் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை, பட்டுப் பூங்காவில்அமைய உள்ள துணை மின் நிலையம், உள்ளூர் திட்டக் குழுமம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் பெறுதல், முடிக்கப்பட்ட தொழிற்கூடங்களில் கைத்தறிகள் நிறுவுதல் மற்றும் பட்டு பூங்கா தொழில் முனைவோரிடமிருந்து பங்கு மூலதனம் பெறுதல் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு முன் பட்டுப் பூங்காவையும் அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தக் கூட்டத்தில் கைத்தறி,துணி நூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலர் அபூர்வா,முதன்மைச் செயலர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை ஆணையர் பீலா ராஜேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, மக்களவை உறுப்பினர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x