Published : 11 Jun 2021 08:57 PM
Last Updated : 11 Jun 2021 08:57 PM

மனநலம் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாக சுற்றித்திரிந்தவரை குடும்பத்துடன் சேர்த்த இளைஞர்கள்

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே . அகிலாண்டகங்கைபுரம் கிராமத்தில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ்செல்வன்.

திண்டுக்கல்

மனநலம் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து பல ஊர்களில் சுற்றித்திரிந்தவரை பசியில்லா வடமதுரை அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் மீ்ட்டு அவரது குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் ‘பசியில்லாத வடமதுரை’ என்ற அமைப்பின் மூலம் ஆதரவற்றவர்களுக்கு தொடர்ந்து உணவுகள் வழங்கிவருகின்றனர்.

கரோனா காலத்திற்கு முன்பு இருந்தே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சாலையோரம் திரிபவர்களை தேடிப்பிடித்து முடிவெட்டுதல், புத்தாடை அணிவித்தல், உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

கரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டு சாலையோரம் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் சில தினங்களுக்கு இந்த அமைப்பினர் ஈடுபட்டனர். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினர். இவரிடம் விசாரித்ததில் முழு விபரங்களை அவரால் சொல்ல முடியவில்லை. இதையடுத்து அவரது புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்தனர்.

இந்த புகைப்படத்தை முகநூலில் பார்த்த கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே அகிலாண்டகங்கைபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர்கள் பசியில்லாத வடமதுரை அமைப்பினரை தொடர்புகொண்டு அவரது பெயர் தமிழ்செல்வன் என்றும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார் என்றும், எங்கு தேடியும் கிடைக்கவில்லை, எனவே இறந்துவிட்டார் என நினைத்துவிட்டோம். தற்போது முகநூலில் அவரது படத்தை கண்டதில் மிக்க மகிழ்ச்சி, அவரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்க மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தேடிய போது திண்டுக்கல்பகுதியில் அவரை காணவில்லை. அவர் கால்நடையாக நடந்து பல ஊர்களை சுற்றித்திரிவது தெரிந்தது.

இதையடுத்து திண்டுக்கல்லில் பல்வேறு திசைகளில் செல்லும் சாலைகளில் அவர் நடந்து சென்றுகொண்டிருக்ககூடும் என சமூக ஆர்வலர்கள், நண்பர்களுக்கு அவரது புகைப்படத்தை அனுப்பி, கண்டால் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து பழநி அருகே அவர் நடந்துசென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவரை அழைத்து வந்து குளிக்கவைத்து, புத்தாடைகள் உடுத்தி, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து பசியில்லாத வடமதுரை அமைப்பை சேர்ந்த பிரேம் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு காரில் அவரை அழைத்துக்கொண்டு அவரது கிராமத்திற்கு சென்று குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர். ஏழு ஆண்டுகளாக பிரிந்து இருந்த குடும்ப உறுப்பினரை சந்தித்த மகிழ்ச்சியில் தமிழ்செல்வன் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x