Published : 11 Jun 2021 02:55 PM
Last Updated : 11 Jun 2021 02:55 PM
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே அதிகார சண்டையால் மக்கள் பாதிக்கப்படுவதுடன் நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 40 நாட்களில் 21 முறை அதிகரித்துள்ளது. இதை கண்டித்து 30 பெட்ரோல் பங்க்குகள் முன்பு காங்கிரஸார் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி, செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
"கரோனாவால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த காலகட்டத்தில் மத்திய அரசு கடந்த 40 நாளில் 21 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
இந்த விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100ஐ எட்டியுள்ளது. இதைப்பற்றி எந்த அக்கறையும் ஆளும் மத்திய பாஜக அரசுக்கு இல்லை.
புதுவையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 40 நாட்கள் முடிவடைந்தும் அமைச்சரவை பதவியேற்கவில்லை. இதுதான் ரங்கசாமியின் லட்சணம். யார் ஆட்சி செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஒட்டுமொத்த துறைகளையும் முதல்வர் ரங்கசாமியே கையில் வைத்துள்ளார்.
கரோனாவால் அதிகளவில் மக்கள் மடிந்து வருகின்றனர். எங்கள் ஆட்சியில் கரோனா மரணங்களை தடுத்தோம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை.
துணை முதல்வர், 2 அமைச்சர்கள் வேண்டும் என சண்டை நடக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே அதிகார சண்டையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நிர்வாகம் ஸ்தம்பித்து சீர்கெட்டுள்ளது." என்று குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT