Published : 11 Jun 2021 01:40 PM
Last Updated : 11 Jun 2021 01:40 PM
கரோனா காலத்தில் உயிரிழந்த இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்புச் சான்றிதழ்களை நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கரோனா தொற்று பாதித்து பலியாகும் நபர்களுக்கு, கரோனா காரணமான மரணம் என இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடப்படாததால், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன.
சக வழக்கறிஞர் கண்ணன் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், அவர் மூச்சுத் திணறலால் இறந்தார் எனச் சான்று வழங்கப்பட்டது. கரோனா மரணம் என இறப்புச் சான்றிதழில் குறிப்பிடாததால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் அரசின் நிதியுதவி கிடைக்கப்பெறுவது தடைப்படுகிறது” எனக் கவலை தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, கரோனா மரணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என நாடு முழுவதுமே குறை கூறப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கரோனா பாசிட்டிவ் சான்றிதழ் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட மரணங்களை கரோனா மரணங்கள் எனப் பதிவு செய்வதில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால்தான், எதிர்காலத்தில் தொற்றுப் பரவலைச் சமாளிப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும், இறப்புகளைத் துல்லியமாகக் குறிப்பிடுவது, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டனர்.
இணை நோய்கள் உடையவர்களும் கரோனாவுக்கு பலியாகி உள்ளதால், கரோனா காலத்தில் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களை நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த ஆரம்பக்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT