Published : 11 Jun 2021 12:29 PM
Last Updated : 11 Jun 2021 12:29 PM
தமிழக அரசால் வரையப்பட்டு அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் உருவப் படம் கடந்த ஆட்சியில் அகற்றப்பட்டது. மீண்டும் பழையபடி புதுப்பொலிவுடன் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நிறுவ வேண்டும் என அரசுக்கு வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:
“1967 ஜூன் 23 அன்று, தமிழக முதல்வர் அண்ணா தலைமையிலான அரசு, வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணை ஒன்றை வெளியிட்டது (G.O.MS.1.1193). அதன்படி, ஒவியப் பெருந்தகை, கே.ஆர். வேணுகோபால் சர்மாவால் திருவள்ளுவர் ஓவியம் வரையப்பட்டது.
தமிழகத்தில் அரசியல், மொழி, கலை சார்ந்த அறிஞர் பெருமக்களால் ஒருமனதாக வழிமொழியப்பட்டு, மத்திய-மாநில அரசுகளால் ஏற்பு அளிக்கப்பட்ட திருவள்ளுவர் திருவுருவப் படம், தமிழ்நாடு முழுமையும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்துகள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டது. சாதி, மத பேதம் அற்ற பொதுநோக்கம், குறள்வழியில் நிலைநிறுத்தப்பட்டது.
குறள் ஓவியம் தந்த, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்தார். கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு சிலை நிறுவி, வள்ளுவத்தின் புகழை பார் அறியச் செய்தார்.
ஆனால், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், திருவள்ளுவரின் உண்மை உருவத்தை படிப்படியாக மறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர்களின் அறைகளில் இருந்த, திருவள்ளுவரின் ஓவியம் காணாமல் போயிற்று. அரசு அச்சகத்திலும் புதிய படங்கள் அச்சிடுவது படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
அதன்பிறகு, மெல்ல மெல்லத் தங்கள் சுயநல மத அரசியலை, திருவள்ளுவரின் மேல் போர்த்தத் தொடங்கினர். திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசத் தொடங்கினர். காப்புரிமை பெறப்பட்ட, ஒன்றிய, மாநில அரசுகளால் ஏற்பு அளிக்கப்பட்ட, அரசு உடைமை ஆக்கப்பட்ட அந்தத் திருவள்ளுவர் ஓவியம், அண்ணா, கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பொலிவு பெற்று இருந்ததுபோல், மீண்டும் பொலிவு பெற வேண்டும். அனைத்து அமைச்சர்கள், அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகளில் திருவள்ளுவர் ஓவியப் படம் இடம் பெறச் செய்திட வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன்”.
இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT