Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை, இன்று (ஜூன் 11) முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு ரூ.65.10 கோடி மதிப்பீட்டில், 647 பணிகள் மூலம் 4,061 கி.மீ. தொலைவுக்கு வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக நாளை (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த தண்ணீர் டெல்டா பகுதி ஆறு, கால்வாய்களுக்கு வந்து சேரும் முன், டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்கவும் கண்காணிக்கவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று (ஜூன் 11) காலை புறப்பட்டு விமான மூலம் திருச்சி வருகிறார். அங்கிருந்து காரில் கல்லணைக்கு செல்லும் முதல்வர் அங்கு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை திறந்து வைக்கிறார்.

பின்னர், அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாக தஞ்சாவூருக்கு வரும் வழியில், வல்லம் அருகே முதலைமுத்து வாரி தூர்வாரப்பட்டுள்ளதையும், தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் நடைபெறும் தூர்வாரும் பணியையும் முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு செய்கிறார்.

அதன் பின்னர் திருச்சி செல்லும் முதல்வர், அங்கு தூர்வாரும் பணி கண்காணிப்பு அதிகாரிகள், பொதுப்பணித் துறையினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இரவில் திருச்சியில் தங்கிய பிறகு, நாளை (ஜூன் 12) காலை சேலம் மாவட்டத்துக்கு சென்று மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடுகிறார்.

தொண்டர்களுக்கு கடிதம்

இந்நிலையில் திமுக தொண்டர்களுக்குஸ்டாலின் நேற்று எழுதிய கடிதம்: திருச்சி, சேலம் பயணம் முழுக்க முழுக்க அரசுப் பணிகள் சார்ந்தவை என்பதால் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம். வரவேற்பு அலங்காரங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம்.

கரோனா தொற்று சங்கிலியை முழுமையான அளவில் உடைக்க வேண்டியுள்ளது. இந்த ஆட்சி அமைவதற்கான அயராத உழைப்பை அல்லும் பகலும் வழங்கிய தொண்டர்களைக் காண முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குள்ளும் இருக்கிறது. காலம் விரைவில் மாறும். நோய்த் தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு தொண்டர்களைக் காண நேரில் வருவேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x