Last Updated : 28 Dec, 2015 10:42 AM

 

Published : 28 Dec 2015 10:42 AM
Last Updated : 28 Dec 2015 10:42 AM

மீண்டு எழுகிறது சென்னை: உடல் நலனை காப்பது மட்டுமல்ல.. மனக்கவலையை மாற்றும் அருமருந்தாய்...!

‘தி இந்து’ சார்பிலான மழை வெள்ள நிவாரண முகாமில் ஆர்வமாய் தன்னை இணைத்துக்கொண்டு நிவாரணப் பணிகளைச் செய்ததில் இளைஞர்களின் பங்கு அதிகம். அதில், சேப்பாக்கம், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த 4 நாட்களாக சேப்பாக்கம், லாக் நகர், பீச் ரோடு, எல்லீஸ் நகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்றும், அப்பகுதிகளில் மக்களைச் சந்தித்தும் ’தி இந்து – இலவச மருத்துவ முகாம்’ நடைபெறும் தகவலை நேரிலேயே சொன்னார்கள். அவர்களின் செயலுக்கு நல்ல பயன் கிடைத்தது.

இணைந்த இதயங்கள்

காலை 9 மணியிலிருந்தே பெரியவர்கள், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என ‘தி இந்து’ இலவச மருத்துவ முகாம் நடைபெற்ற சேப்பாக்கத்துக்கு வரத் தொடங்கினர். ’தி இந்து’ இலவச மருத்துவ முகாமில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரைம் இந்தியன் மருத்துவமனை, வில்லிவாக்கம் பகுதியிலிருக்கும் லைஃப் கேர் டிகேஜெ மருத்துவமனை, புரசைவாக்கத்தில் இருக்கும் டாக்டர் குப்தாஸ் டென்டல் ஹெல்த் சென்டர் ஆகியவை மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பில் கரங்கோர்த்தன. இவர்களோடு ஈரோடு, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மருத்துவர்களும், மருந்தாளுநர்களும், உதவியாளர்களும் பங்கேற்றது மருத்துவ முகாம் சிறப்புற நடைபெற துணை புரிந்தனர்.

சிறப்பு மருத்துவர்கள்

முகாமுக்கு வந்திருந்த மக்கள் ஒவ்வொருவரையும் தனிக் கவனமெடுத்து பரிசோதனை செய்தார்கள் மருத்துவர்கள்.

பிரைம் இந்தியன் மருத்துவமனை இயக்குநரும், இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவருமான கண்ணன் கூறும்போது, “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை பல மருத்துவ முகாம்களை நடத்தியிருக்கின்றோம். ஆனால், ’தி இந்து’வோடு இணைந்து பங்கேற்ற இந்த மருத்துவ முகாம் எங்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தருவதாக உள்ளது. ’தி இந்து’வோடு இணைந்து தொடர்ந்து இப்படியான மருத்துவ முகாம்களை நடத்த தயாராக இருக்கின்றோம்” என்றார்.

இவரோடு இணைந்து நீரிழிவு சிறப்பு மருத்துவர் கோதண்டராமன், லைஃப் கேர் டிகேஜெ மருத்துவமனை இயக்குநரும், மகளிர் சிறப்பு மருத்துவருமான தாட்சாயணி, முட நீக்கியல் சிறப்பு மருத்துவர் சுரேஷ் ஆனந்தன், குழந்தை நல மருத்துவர் ரேஷ்மி உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிகிச்சையும், ஆலோசனைகளையும் வழங்கினர்.

பரிசோதனை, மருந்து இலவசம்

டாக்டர் குப்தாஸ் டென்டல் ஹெல்த் சென்டரின் இயக்குநர் மருத்துவர் எம்.எஸ்.சந்திரகுப்தா, “இந்த மருத்துவ முகாம் நல்ல திட்டமிடலோடு நடைபெற்றது. மேலும், பல் மருத்துவம் குறித்த பரிசோதனைக்கு வந்த அனைவருக்கும் பிரஷ், பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களையும் இலவசமாக வழங்கியது நல்ல பலனைத் தருவதாக அமைந்தது” என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார். அவரோடு இணைந்து பல் மருத்துவர்கள் கெளரிசங்கர், இந்துமதி, உதவியாளர் ஜெய்கணேஷ் ஆகியோரும் பல் பரிசோதனை செய்து, ஆலோசனைகளையும் வழங்கினர்.

அரசு மருத்துவர்கள்

ஈரோடு மாவட்டத்திலிருந்து வந்திருந்த அரசு பொது மருத்துவர் சங்கீதா, கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நந்தகுமார், பெரம்பலூர் மாவட்டம் காரை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அசோக், மருந்தாளுநர் துளசிமணி, செவிலியர் மகாலெட்சுமி ஆகியோர் மருத்துவ முகாமில் சிறப்பான பங்களிப்பைச் செய்தனர்.

அக்கா, அண்ணன்களுக்கு நன்றி

மருத்துவ முகாமுக்கு தனது 3 வயது தம்பியை அழைத்துக்கொண்டு வந்திருந்தார் மகாலட்சுமி. கிண்டியிலுள்ள விடுதியொன்றில் தங்கி 7-ம் வகுப்பு படிக்கும் இவரது வீடு லாக் நகரில் இருக்கிறது.

“எனக்கும் தம்பிக்கும் இருமலு. சளியும் புடிச்சிருக்கு. எங்கப்பா குதிரைக்கு பட்டை கட்டுற வேலை செய்யிறாரு. அம்மா சமைச்சிக்கிட்டு இருக்காங்க. அதான் நானும் தம்பியும் வந்தோம்..” என்று சொல்லி முடிப்பதற்குள் நான்கைந்துமுறை இருமல் வந்துவிட்டது மகாலட்சுமிக்கு.

மருத்துவ பரிசோதனைகள் முடிந்து, மருந்துகளை வாங்கிக்கொண்டு வந்தவர், “அன்னிக்கு மழைவெள்ளம் வந்தப்போ நான் இங்கே இருக்கிற எங்க வீட்லதான் இருந்தேன். அய்யோ.. எம்புட்டு தண்ணி வீட்டுக்குள்ள வந்துச்சு. அன்னிலேர்ந்து எனக்கு ஒடம்பு முடியலே. இன்னிக்கு இங்க உள்ள அக்கா, அண்ணன் எல்லாரும் அன்பா பேசி மருந்து, மாத்திரை கொடுத்தாங்க. எனக்கு இனிமே ஒண்ணும் வராது. எல்லாருக்கும் ரொம்ப தாங்க்ஸ்..” என்றபடி தம்பியின் கையைப் பிடித்தபடி சென்றார் மகாலட்சுமி.

நிலவேம்பு கசாயமும், மிளகு வெற்றிலையும்

முகாமுக்கு சிகிச்சை பெற வந்தவர்களுக்கு மட்டுமில்லாமல், பங்கேற்ற அனைவருக்கும் நிலவேம்பு கசாயமும், மிளகு வெற்றிலையையும் வழங்கினார் தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமா அத் கூட்டமைப்பின் தலைவர் எம்.முஹம்மது சிக்கந்தர். “நோய் வராமல் தடுப்பதற்கு இந்த மருந்துகள். வந்த பசியை போக்குவதற்கு இதோ இருக்கிறது..!” என்று முகாமில் பங்கேற்ற மருத்துவர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்தும் அளித்து உபசரித்தார்.

துயரத்திலிருந்து மீண்ட மக்களை நோய்த் தொற்றிலிருந்தும் காப்பதில் தன்முனைப்போடு களத்தில் நிற்கிறது ‘தி இந்து’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x