Published : 10 Jun 2021 07:56 PM
Last Updated : 10 Jun 2021 07:56 PM

இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்: 18 வயது பூர்த்தியானவர்கள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பிரதிநிதித்துவப் படம்.

கோவை

இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்து, 18 வயது பூர்த்தியானவர்கள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

"சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.25 ஆயிரமும், 18 வயது முதிர்வடைந்த பிறகு முதிர்வுத்தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்துப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பம் செய்து அசல் வைப்பு நிதி பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில், 18 வயது முதிர்வடைந்தவர்கள், உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நலப் பிரிவு அலுவலர், மகளிர் நல அலுவலர்களிடம் அசல் வைப்புநிதிப் பத்திரம், பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல், பயனாளியின் பெயரில் தனி வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகிய சான்றுகளுடன் சமர்ப்பித்துப் பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற இரண்டாவது பெண் குழந்தை பிறந்து, மூன்று ஆண்டுகளுக்குள் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளின் தாயார் குடும்பநல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ரூ.72 ஆயிரத்துக்குள் வருமானம் இருப்பதற்கான சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x