Published : 10 Jun 2021 07:42 PM
Last Updated : 10 Jun 2021 07:42 PM
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சைபர் செல் சிஐடி பிரிவு காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சிபி சக்கரவர்த்தியைத் திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமித்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி இன்று (ஜூன் 10) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி கூறுகையில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பங்களிப்புடன் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது விரைவில் செயல்படுத்தப்படும்.
காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து வரும் புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி முன்னுரிமை அடிப்படையில் வழக்கை துரிதப்படுத்தி தீர்வு காணப்படும். கரோனா ஊடரங்கு காலம் என்பதால் புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம் காவல் துறையினர் கனிவுடன் நடந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமந்தோறும் 'கிராம கண்காணிப்புக் குழு' ஏற்கெனவே அமலில் உள்ளது. இக்குழு தொடர்ந்து செயல்படும். தற்போது கரோனா பேரிடர்க் காலம் என்பதால் கரோனா பரவலைத் தடுப்பது முதல் வேலையாக இருக்கிறது.
திருப்பத்தூரில் தளர்வுகளற்ற ஊரடங்கில் தனிமனித இடைவெளியை யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் கூட்டம், கூட்டமாக மக்கள் சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு வழங்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.
கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு காக்கப்படும். குற்றச் செயல்கள் தடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் 2-வது எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றுள்ள சிபி சக்கரவர்த்திக்குத் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், அமைச்சுப் பணியாளர்கள் எனப் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT