Published : 10 Jun 2021 07:14 PM
Last Updated : 10 Jun 2021 07:14 PM

நடுவட்டம் வனப்பகுதியில் வனத்துறை, வருவாய்த் துறையினர் சர்வே

நடுவட்டம் கிராமத்தில் காப்புக்காடு, வருவாய் நிலங்களை வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் நில அளவை செய்தனர்.

உதகை

உதகை அருகே நடுவட்டம் கிராமத்தில் காப்புக்காடு, வருவாய் நிலங்களை வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் நில அளவை செய்தனர்.

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில், வனப்பகுதியை ஆக்கிரமித்து, கவிதா செண்பகம் என்பவர், ரிசார்ட் கட்டுவதாகவும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று (ஜூன் 09) விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசு மற்றும் வனத்துறைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவில், "ரிசார்ட் கட்டுவதற்காக, வனத்துறை நிலத்தைத் தனியார் ஆக்கிரமிப்பு செய்வதாக மனுதாரர் புகார் கூறுகிறார். வனப்பகுதியில் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட, ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது.

வனத்துறை உயர் அதிகாரியின் கவனத்துக்கு எடுத்து வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், கட்டுமானத்தைத் தொடங்கி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனவே, நீலகிரி மாவட்ட ஆட்சியரும், வனத்துறை அதிகாரியும் அந்தப் பகுதியைப் பார்வையிட்டு, ஆய்வு செய்ய வேண்டும். வனத்துறை நிலம், ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மூன்று வாரங்களில், நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

வனப்பகுதியில் இருந்து, குழாய் இணைப்பு வாயிலாகத் தண்ணீர் எடுப்பதாகவும், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தண்ணீர் எடுக்கப்பட்டால், அதை உடனடியாக நிறுத்த வேண்டும். இதையும், அறிக்கையில் குறிப்பிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் இன்று (ஜூன் 10) சர்ச்சைக்குரிய நடுவட்டம் பகுதியில் ஆய்வு செய்தனர்.

நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார், சரகர் சிவா, உதகை வட்டாட்சியர் குப்புராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும், அப்பகுதியில் காப்புக்காடுகள் மற்றும் வருவாய்த் துறை நிலங்கள் குறித்து நில அளவை நடத்தினர்.

நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார் கூறும்போது, "நீலகிரி வனக்கோட்டம் நடுவட்டம் சரகத்துக்கு உட்பட்ட டி.ஆர்.பஜார் லீஸ் பகுதியில் பட்டா நிலத்தில் கட்டுமானம் நடந்துள்ளது. நடுவட்டம் பேரூராட்சி கட்டிடம் கட்ட அனுமதி அளித்துள்ளது. அதன் பேரில் மின்சார இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், கட்டிடம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. மேலும், ஓடையிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. இவை விதிமீறல்களாகும். வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் அத்துமீறி சாலை அமைத்தது, பாறைகளை உடைத்தது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.

வனத்துறையினர் சாலையில் அமைத்த தடையைத் தகர்த்தது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது இப்பகுதியில் சர்வே நடத்தப்படுகிறது. சர்வே முடித்த பின்னர் விதிமீறல்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x