Published : 10 Jun 2021 05:58 PM
Last Updated : 10 Jun 2021 05:58 PM
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜூன் 14-ம் தேதி முதல் 50 சதவீதப் பணியாளர்களுடன் மட்டுமே அனைத்துப் பிரிவுகளும் செயல்பட வேண்டும் என, தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், நீதிமன்றம் வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. அதனை ஏற்று, நீதிமன்றத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்குடன், நேரடியாக வழக்கை விசாரிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு, காணொலி மூலமாக நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் அறைகள், சங்க அலுவலகங்கள், நூலகங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் நீதிபதிகள் மட்டும் நீதிமன்றங்களுக்கு வந்து விசாரித்து வருகின்றனர். அரசு வழக்கறிஞர்கள் சிலர் நேரில் ஆஜராகி வருகின்றனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில், ஜூன் 14-ம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, அனைத்துப் பிரிவுகளும் 50 சதவீதப் பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ப.தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற ஊழியர்கள் இரு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாட்கள் பணி என, சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்றும், மற்றவர்கள் பணிக்கு வரத் தயாராக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பிக்கும் வழிகாட்டுதல் மட்டுமல்லாமல், கரோனா தடுப்பு நடவடிக்கையாகத் தமிழக அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், தலைமைப் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT