Last Updated : 10 Jun, 2021 04:43 PM

 

Published : 10 Jun 2021 04:43 PM
Last Updated : 10 Jun 2021 04:43 PM

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

நல்லம்பல் பகுதியில் உள்ள ஏரியை ஆழப்படுத்தும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்ட திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வி.சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள்

 காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை இன்று(ஜூன் 10) நடைபெற்றது.

திருநள்ளாறு அருகேவுள்ள அத்திப்படுகை கிராமத்தில் நிரவி, காக்கமொழி, ஊழியப்பத்து, அருண்மொழிதேவன், விழிதியூர் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் அரசலாற்றின் குறுக்கே 60 மீட்டர் நீளம், 7.50 மீட்டர் அகலத்தில் புதிதாக பாலம் கட்டப்படவுள்ளது. தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள இந்த பாலம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இதில் திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா, மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வி.சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் ஏ.ராஜசேகரன், நிர்வாக பொறியாளர் கே.சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.

பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.சிவா செய்தியாளர்களிடம் கூறியது: "இப்பகுதி மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியுள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் விவசாயிகள், அன்றாடம் வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்வோர், திருநள்ளாறு கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும். சுமார் 20 கி.மீ. தூரம் சுற்றிச் செல்வது தவிர்க்கப்படும்.

இந்தப் பாலம் கட்டுவதற்காக, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தமிழகப் பகுதியில் உள்ள நாகை மாவட்ட ஆட்சியரிடம் பேசி அங்குள்ள இடத்தையும் பெற்றுக் கொடுத்தார். அதற்காக இரு ஆட்சியர்களுக்கும் கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 12 மாதங்களுக்கும் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.96 லட்சம் செலவில் நல்லம்பல் ஏரியை ஆழப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்த பின்னர் நல்லம்பல் ஏரியை சுற்றுலாத் தலாமாக மாற்ற தேவையான நடவடிக்கைள் எடுக்கப்படும்" என்றார்.

மேலும் பொன்பற்றி, குமாரக்குடி, மானாம்பேட்டை, தருமபுரம் ஆகிய கிராமங்களில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, நல்லம்பல் ஏரியை ஆழப்படுத்தும் பணி ஆகிய பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. இதில் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தருமபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் கலந்து கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x