Published : 10 Jun 2021 02:52 PM
Last Updated : 10 Jun 2021 02:52 PM
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு உறுப்பினர்களை நியமித்துள்ள முதல்வர் ஸ்டாலின், ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், அவற்றைச் சரிசெய்யும் வகையில், இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்துள்ளது.
அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், அவற்றிற்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி, ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில், கீழ்க்காணும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அமைத்து முதல்வர் இன்று (10-6-2021) உத்தரவிட்டுள்ளார்:
1. ஏ.கே.ராஜன் (நீதிபதி ஓய்வு) தலைவர்
2. ஜி.ஆர்.ரவீந்திரநாத் உறுப்பினர்
3. ஜவஹர் நேசன், உறுப்பினர்
4. அரசு முதன்மைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உறுப்பினர்
5. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை உறுப்பினர்
6. அரசு செயலாளர், சட்டத்துறை உறுப்பினர்
7. அரசு முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உறுப்பினர்
8. இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் உறுப்பினர்
9. கூடுதல் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்ககம் / செயலர், தேர்வுக் குழு உறுப்பினர்-செயலர் / ஒருங்கிணைப்பாளர்
இந்தக் குழு உரிய புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாட்டிலுள்ள பின்தங்கிய மாணவர்களின் நலனைப் பாதுகாத்திடத் தேவையான பரிந்துரைகளை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும். இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்”.’
இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT