Published : 10 Jun 2021 02:43 PM
Last Updated : 10 Jun 2021 02:43 PM
நீட் தேர்வு உள்பட அனைத்து நுழைவுத் தேர்வுகளிலிருந்தும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூன் 10) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்:
"மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள பள்ளிக் கல்வி மற்றும் கல்வியறிவுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட 2019-2020ஆம் ஆண்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயலாக்க வகைப்படுத்துதல் குறியீட்டுக்குத் தங்களின் கனிவான கவனத்தினை ஈர்க்க விரும்பகிறேன்.
அந்தக் குறியீட்டில், தமிழ்நாடு 90 விழுக்காடு என்ற இலக்கினைக் கடந்து சாதனை படைத்துள்ளதோடு, நான்கு இதர மாநிலங்களுடன் சேர்ந்து முதல் நிலையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 70 காரணிகளை ஆராய்ந்து இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வியில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் வகையில் கல்வியின் தரத்திற்கு இந்த திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது.
பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசினால் வெளியிடப்பட்ட குறியீட்டின்படி, தமிழ்நாட்டின் கல்வித் தரம் மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே, மருத்துவப் படிப்புகள் உள்பட அனைத்து தொழில் படிப்பு மற்றும் இதர படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களின் திறமையைப் பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது கருத்து.
எனவே, நீட் தேர்வு உள்பட அனைத்து நுழைவுத் தேர்வுகளிலிருந்தும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளித்து, அனைத்து மேற்படிப்புகளுக்குமான சேர்க்கையை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த ஆண்டைப் பொறுத்தவரையில், கோவிட்-19 தொற்று காரணமாக மதிப்பெண் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு எந்த அடிப்படையில் மதிப்பெண்களை வழங்குகிறதோ அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ஓபிஎஸ் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT