Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 80 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம்: பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்

திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 80 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 80 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவ சிகிச்சை மையத்தை நேற்று பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் உட்பட 250 படுக்கைகள் கொண்ட கரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 80 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவ சிகிச்சை மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று திறந்துவைத்தார்.

தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில், 19 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா, உதவி ஆட்சியர் (பயிற்சி) அனாமிகா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, திருவள்ளூர் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அரசி வத்சன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகளுக்கான இணை இயக்குநர் ராணி மற்றும் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வுகளின்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, தினசரி பாதிப்பு 2 ஆயிரமாக இருந்தது மாறி, தற்போது 400 ஆக குறைந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 23 சதவீதம் என்ற நிலையிலிருந்து, தற்போது 6 சதவீதமாக குறைந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளர்களுக்கென்று 1,254 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 714 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஆகும். இதில் 412 படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன.

இந்நிலையில், மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள், பூந்தமல்லி தனியார் திருமண மண்டபத்தில் 150 படுக்கைகள், ஆவடியில் 150 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 272 படுக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x