Published : 09 Jun 2021 06:25 PM
Last Updated : 09 Jun 2021 06:25 PM

கல்லட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து கணவன், மனைவி பலி

விபத்துக்குள்ளான கார்.

உதகை

கல்லட்டி மலைப்பாதையில் தலைகீழாக கார் கவிழ்ந்து கணவன், மனைவி உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பஷீர் (55), அவரது மனைவி பீபிஜான் (48). இவர்களுடைய மருமகன் அனிலூர் ரகுமான். இவர், நீலகிரி மாவட்டம் மாயார் பகுதியில் மின்சார வாரியத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

பஷீர், பீபிஜான் தம்பதி தங்கள் மகளைப் பார்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டிராவல்ஸ் மூலமாக கார் வாடகைக்கு எடுத்து, இ-பதிவு செய்து இன்று (ஜூன் 09) காலை அங்கிருந்து புறப்பட்டு உதகை - கல்லட்டி மலைப்பாதை வழியாகச் சென்றுள்ளனர்.

அப்போது, கார் 21-வது வளைவுப் பகுதியில் வந்தபோது, திடீரென பிரேக் பிடிக்காமல், 21-வது வளைவில் இருந்து தலைகீழாக கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கணவன் - மனைவியான பஷீர் மற்றும் பீபிஜான் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரை ஓட்டி வந்த ஓட்டுநர் கார்த்திக் காயங்களுடன் உயிர் தப்பினார்.

புதுமந்து காவல்நிலைய ஆய்வாளர் எஸ்.ராஜேஸ்வரி தலைமையில் போலீஸார் கார் ஓட்டிவந்த ஓட்டுநர் கார்த்திக் (32) இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மலைப்பாதையாக இருப்பதாலும், விபத்துகள் ஏற்பட்டு அதிக உயிர் சேதம் ஏற்பட்ட காரணத்தினாலும் 2019-ம் ஆண்டு முதல் இந்தச் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. உள்ளூர் மற்றும் அவசர வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டக் காவல்துறை, மசினகுடி கிராம மக்கள், வணிகர் சங்கம், ஓட்டுநர் சங்கம் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, சாலையைச் சீர்செய்து, கல்லட்டி மலைப்பாதையில் நீலகிரி மாவட்டம், பிற மாவட்ட மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்த இலகுரக வாகனம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயக்க கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனுமதிக்கப்பட்டது.

கல்லட்டி மலைப்பாதையில் போக்குவரத்துக்கு அனுமதி அளித்த முதல் நாளே சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. அன்று முதல் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று கார் கவிழ்ந்து இரு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x