Last Updated : 09 Jun, 2021 06:12 PM

 

Published : 09 Jun 2021 06:12 PM
Last Updated : 09 Jun 2021 06:12 PM

மருத்துவர் பரிந்துரை இல்லாமல் கரோனா மருந்துகளைப் பொதுமக்களுக்கு விற்கக் கூடாது: மருந்தகங்களுக்கு கோவை ஆட்சியர் எச்சரிக்கை

கோவை

கோவையில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு கரோனா மருந்துகள் வழங்கும் தனியார் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.நாகராஜன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

''கரோனா தொற்றின் அறிகுறிகள் முதலில் சாதாரண வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளான சளி, இருமல் போன்று உள்ளதால், பொதுமக்கள் அதனைச் சாதாரண வைரஸ் காய்ச்சல் என எண்ணுகின்றனர். அதற்கு பாராசிட்டமால் போன்ற மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையின்றி சுயமாக மருந்துக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

இதனால், அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு தாமதமாக அடையாளம் காணப்பட்டு, அதன்மூலம் ஆபத்தான சூழல் ஏற்படுகிறது. எனவே, காய்ச்சல் வந்தவுடன் சாதாரணக் காய்ச்சல் எனப் புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவரின் பரிந்துரையின்பேரில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கரோனா தொற்று சிகிச்சைக்கு அசித்ரோமைசின், ஐவர்மெக்டின், டாக்ஸிசைக்கிளின், பாரசிட்டமால், ஸ்டீராய்டு மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த மருந்துகளை விற்பனை செய்யும்போது கண்டிப்பாக மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் வழங்கப்படும் பரிந்துரைச் சீட்டைப் பெற்றுக்கொண்டு மட்டும் மருந்துக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். உயிர் காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் ஆகியவற்றின் இருப்பைச் சரியாகப் பராமரிக்க வேண்டும்.

மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கண்ட மருந்துகளை விற்பனை செய்தால், நோயாளியின் பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் மருத்துவரின் தகவல்களை மருந்துக் கட்டுப்பாட்டு துறை மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் தொலைபேசி அல்லது எஸ்எம்எஸ் மூலம் பரிந்துரை செய்திருந்தால் அதற்குண்டான ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டு மருந்துகளை வழங்கலாம். எக்காரணம் கொண்டும் மருந்துகளைப் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்''.

இவ்வாறு ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x