Published : 09 Jun 2021 06:08 PM
Last Updated : 09 Jun 2021 06:08 PM
லஞ்சப் புகாரில் கைது செய்யப்படுபவர்கள் குற்ற வழக்கில் விடுவிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, துறை ரீதியிலான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், துறைமுக அதிகாரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் துணை தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர் வி.பிரபாகர். லஞ்சப் புகாரில் இவரை 2013-ம் ஆண்டு சிபிஐ கைது செய்தது. அதையடுத்து இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு சிபிஐ நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, தனக்கு மீண்டும் பணி வழங்குவதுடன், இடைநீக்கக் காலத்தை வரன்முறை செய்து பணப் பலன்களையும் வழங்க வேண்டுமென பிரபாகரன் துறைமுகக் கழகத்துக்குக் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், துறைமுகக் கழகம் அவர் மீதான லஞ்சக் குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி, பிரபாகர் மீதான குற்றச்சாட்டை விசாரித்த விசாரணை அதிகாரி, 2 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்லை என்றும், ஒரே ஒரு குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளதாகவும் அறிக்கை சமர்ப்பித்தார்.
இதை ஏற்க மறுத்த ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது தொடர்பாக பிரபாகர் விளக்கம் அளிக்க வேண்டுமென கடந்த ஆண்டு அக். 19 அன்று நோட்டீஸ் பிறப்பித்தது.
இதை எதிர்த்து பிரபாகர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.வைத்யநாதன் முன்பாக நடந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே.வெங்கடரமணி ஆஜரானார்.
துறைமுகப் பொறுப்புக் கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹாஜா முகைதீன் கிஸ்தி, துறைமுகப் பொறுப்புக் கழகப் பணியாளர்கள் விதிகளின்படி, விசாரணை அதிகாரியின் அறிக்கையை அப்படியே ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஏற்றுக்கொள்ள வேண்டும் என எந்தவொரு கட்டாயமும் கிடையாது.
குற்றச்சாட்டுக்குப் போதிய முகாந்திரம் இருப்பதாகக் கருதினால், அந்த அறிக்கையை நிராகரிக்கவும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. மனுதாரர் துறை ரீதியிலான விசாரணையை எதிர்கொண்டே ஆக வேண்டும், என வாதிட்டார்.
அதையடுத்து, நீதிபதி எஸ்.வைத்யநாதன் நேற்று (ஜூன் 08) பிறப்பித்துள்ள தனது தீர்ப்பில், "துறைமுகப் பொறுப்புக் கழகம் தனக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் பாரபட்சமானது எனக்கூறி, மனுதாரர் விளக்கம் அளிக்க மறுத்துள்ளார்.
லஞ்சப் புகாரில் கைது செய்யப்படுபவர்கள் குற்ற வழக்கில் விடுவிக்கப்பட்டதைக் காரணம் காட்டி, துறை ரீதியிலான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது. நீதிமன்றங்களின் தவறான முடிவுகளால் குற்றவாளிகள் சில நேரங்களில் விடுவிக்கப்படுகின்றனர்.
குற்ற வழக்குகள் மீதான விசாரணை ஓராண்டுக்குள் முடியவில்லை என்றால், துறை ரீதியிலான விசாரணையை முடித்து அதன் முடிவுகள் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் வைக்கப்பட வேண்டும். ஊழல் புற்றுநோயை விடக் கொடியது.
இதை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் மெல்ல, மெல்லப் பரவி இந்த சமூகத்தை ஊழல் நிறைந்த சமூகமாக மாற்றிவிடும்.
மனுதாரர் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.
எனவே, 10 நாட்களுக்குள் அவர் தனது விளக்கத்தை துறைமுகப் பொறுப்புக் கழகத்துக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காதபட்சத்தில் துறைமுகக் கழகம் தனது வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், இது தொடர்பாக இறுதி உத்தரவைப் பிறப்பிக்கலாம்" என உத்தரவிட்டு, பிரபாகரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT