Last Updated : 09 Jun, 2021 04:31 PM

 

Published : 09 Jun 2021 04:31 PM
Last Updated : 09 Jun 2021 04:31 PM

மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 14-ல் முடிவடைகிறது: தூத்துக்குடியில் 3 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகு மீனவர்கள்

தூத்துக்குடி

மீன்பிடித் தடைக்காலம் முடிவடைய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் சுமார் 3 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர்.

மீன்களின் இணப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பார், தருவைகுளம் ஆகிய இடங்களில் சுமார் 450 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த 61 நாட்களையும் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கவும், வலைகளை சரி செய்யவும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கும் பணிகளையும், வலைகளை சரி செய்யும் பணிகளையும் கடந்த 2 மாதங்களாக மேற்கொண்டனர். இந்த பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளது.

மீன்பிடித் தடைக்காலம் வரும் 14-ம் தேதியோடு முடிவடைவதால் இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் மீனவர்கள் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை பொறுத்தவரை மீன்பிடித் தடைக்காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பாடு சரியாக இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் தடைகாலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே மீனவர்கள் படகுகளை கரையில் நிறுத்திவிட்டனர்.

இதனால் தற்போது சுமார் 3 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இது குறித்து விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது: மீன்பிடித் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் கரோனா ஊரடங்கு, மீன்பாடு குறைவு, கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக 135 நாட்களுக்கு மேல் கடலுக்கு செல்லவில்லை.

அதுபோல இந்த ஆண்டு மீன்பிடித் தடைக்காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே பெரும்பாலான படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் கடப்பட்டுவிட்டன. படகுகள் மற்றும் வலைகளை ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு செய்து சீரமைத்துள்ளோம்.

தற்போது மீன்பிடித் தடைக்காலம் முடிவடையவுள்ள நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு செல்லவுள்ளோம். இனியாவது நல்ல மீன்பாடு இருக்கும் என்ற நம்பிக்கையோடு கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறது.

தமிழக அரசு சார்பில் மீன்பிடித் தடைக்காலமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக மீன்பிடித் தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த தொகையை ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்களது கோரிக்கையை அரசு கனிவோடு பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர் அவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x