Published : 09 Jun 2021 03:15 PM
Last Updated : 09 Jun 2021 03:15 PM

இடது பக்கம் இருக்க வேண்டிய இதயம் வலது பக்கம் அமைந்துள்ள மதுரை சிறுவன்:அரசிடம் மருத்துவ உதவி கோரும் பெற்றோர்

மதுரை 

இடது பக்கம் இருக்க வேண்டிய இதயம் வலது பக்கம் அமைந்துள்ளதால் மகனின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு உதவ வேண்டி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு வயது 37. இவர் கட்டிட வேலைக்குச் சென்று வருகிறார். இவரது மனைவி ஜெயலெட்சுமி.

இருவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. ஏழு வயதில் சபரி என்ற மகன் உள்ளார். சபரி பிறக்கும் போதே உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் இடம் மாறிய நிலையில் பிறந்துள்ளார்.

குறிப்பாக உடலின் இடப்பக்கம் இருக்க வேண்டிய இதயம் வலது பக்கமும், சீறுநீரகம் உள்ளிட்ட ஒரு சில உறுப்புகள் உடலில் இடம்மாறிப் பிறந்தார்.

அதனால், கடந்த 7 ஆண்டாக சிறுவன் அடிக்கடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.

குழந்தை நோய்வாய்ப்படுவதால் கடுமையான மருத்துவச் செலவுகளால் நிம்மதியாக வாழமுடியவில்லை என்று பெற்றோர் கூறுகின்றனர்.

தங்களின் மகனுக்கு உதவி வேண்டும் என்று மாடசாமியும், அவரது மனைவியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்சியரை சந்திக்க வந்தனர். ஆட்சியிடம், மகனுக்கு நேரிட்டுள்ள மருத்துவப் பிரச்சனைகளை குறிப்பிட்டு உதவி கோரினர்.

இதுகுறித்து மாடசாமி கூறுகையில், ‘‘என்னுடைய மகன் சபரி, உடல் உறுப்புகள் மாறிமாறி அமைந்துள்ளதால் கடந்த ஏழு வருடங்களாக காய்ச்சல், மயக்கம், தலைசுற்றல், சளி, இருமல் என தொடர்ச்சியாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடும் வேதனைகளை சந்திக்கிறார். இதற்காக கடந்த 6 வருடங்களாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தோம். மருத்துவ செலவு வகையில் இதுவரை 6 லட்ச ரூபாய் செலவழித்து உள்ளோம்.

கூலி வேலைசெய்து வரும் நிலையில், குடும்பமே தன்னை நம்பி இருக்கும் சூழலில் மகனுக்கு மருத்துவச் செலவை செய்யாத முடியாத வறுமை நிலையில் உள்ளோம்.

அடிக்கடி மகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதால் அவருக்கு அவசர மருத்துவ உதவி செய்து மகனின் உயிரைக் காப்பாற்ற ஆட்சியர் உதவி செய்ய வேண்டும்,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x