Published : 09 Jun 2021 03:01 PM
Last Updated : 09 Jun 2021 03:01 PM
புதுச்சேரி அருகே டைலர் ஒருவர், வெளிமாநிலங்களில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள எரிசாராயத்தைக் கடத்தி வந்து, வீட்டுத் தோட்டத்தில் குழிதோண்டிப் புதைத்து விற்பனை செய்துவந்த சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி அருகே கிராமப்பகுதியான ஆண்டியார்ப்பாலத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (44). டைலர் தொழில் செய்து வரும் இவர், கரோனா ஊரடங்கு காரணமாக புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்ததைப் பயன்படுத்தி, கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து மேற்குப் பகுதி போலீஸ் எஸ்.பி. ரங்கநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீஸார், மதகடிப்பட்டில் உள்ள ஆறுமுகத்தின் மாமனார் பழனி என்பவர் வீட்டில் இன்று (ஜூன் 9) அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பழனியின் வீட்டுத் தோட்டத்தில் குழிதோண்டியும், அங்கிருந்த சொகுசு கார் ஒன்றிலும் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட, சுமார் 119 கேன்களில் இருந்த 4,165 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கிருந்த ஒரு கார், ஒரு பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபற்றித் தகவல் அறிந்த வட்டாட்சியர் மணிகண்டன், கிராம நிர்வாக அதிகாரிகள் அமிர்தலிங்கம், இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். கள்ளச் சாராயத்தைப் பதுக்கி வைத்திருந்த டைலர் ஆறுமுகம் தலைமறைவாகிவிட்டதால், போலீஸார் அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதனிடையே போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றித் தவித்து வந்த டைலர் ஆறுமுகம், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து எரிசாராயத்தை மொத்தமாகக் கடத்தி வந்து, தனது வீட்டில் வைக்காமல், வயதான தனது மாமனார் வீட்டில் பதுக்கிவைத்து, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம், கார், பைக் ஆகியவற்றை போலீஸார் கலால் துறையிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT