Published : 09 Jun 2021 02:32 PM
Last Updated : 09 Jun 2021 02:32 PM
தமிழகம் முழுவதும் உள்ள கிராமப் பஞ்சாயத்து அலுவலக வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜகுரு உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சமீபகாலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினப் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு சுதந்திர தினம், குடியரசு தினங்களில் தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்கள் பஞ்சாயத்துத் தலைவர் இருக்கைகளில் அமரும் உரிமை மறுக்கப்படுகிறது.
இதேபோல, ஆவணங்களைக் கையாள விடாமல் பட்டியலினப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தடுக்கப்படுகின்றனர். சாதிப் பெயரைச் சொல்லி அவர்களை அழைப்பதுடன், பிற சமுதாயத்தைச் சேர்ந்த துணைத் தலைவர்களால் மிரட்டப்படுகின்றனர்.
அதனால் சாதிய ரீதியிலான குற்றங்களைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT