Published : 09 Jun 2021 02:06 PM
Last Updated : 09 Jun 2021 02:06 PM
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பார்வைக்கு, கருத்து சொல்ல இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 36 ஆயிரத்து 488 கோயில்கள், 56 திருமடங்கள், திருமடத்துடன் இணைந்தபடி 58 கோயில்கள் உள்ளன. இவை தவிர, 17 சமணக் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் மற்றும் திருமடங்களுக்குச் சொந்தமாக நன்செய், புன்செய், மானாவாரி என்று 4 லட்சத்து 78 ஆயிரத்து 348 ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 22,600 கட்டிடங்கள், 33,665 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதுதவிர 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 பேருக்கு விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.58.68 கோடி வருவாய் கிடைக்கிறது.
தமிழகத்தில் பல கோயில்களின் சொத்து விவரங்கள் சரியானபடி பராமரிக்கப்படாததால், இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் சிலர், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பது, போலியாக பட்டா போட்டு விற்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து கோயில் சொத்துகளின் விவரங்கள் திரட்டப்பட்டு அதை இணையதளத்தில் வெளியிடுமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் சொத்து விவரங்கள் குறித்து விரைவில் இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் விவரம் இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்துவந்தது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களின் நில உரிமை ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோயில் நிலங்களின் சொத்து ஆவணங்கள் 3 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது முதற்கட்டமாக வருவாய்த்துறையின் ஆவணங்களுடன் ஒத்துப்போகின்ற 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்களின் விவரங்கள் அனைத்தும் www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. கோயில்களின் மொத்த நிலங்களில், 72 சதவிகித நிலங்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதில் முக்கியமாக சென்னை வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலை கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருத்தணி கோயில், திருவேற்காடு கோயில், உள்ளிட்ட 47 முக்கியக் கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT