Published : 09 Jun 2021 01:13 PM
Last Updated : 09 Jun 2021 01:13 PM
அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆகும் சட்டம் அடுத்த நூறு நாளில் நிறைவேற்றப்படும், விரைவில் தமிழில் அர்ச்சனை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என முத்தரசன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“பெரியார் 1970ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்கள் ஆக்க வகை செய்யும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கோயில் கருவறை நுழைவுப் போராட்டம் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அப்போதைய முதல்வர் கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதன் தொடர்ச்சியாக 1970 டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக்க வகை செய்யும் முறையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து சனாதானவாதிகள் நீதிமன்றம் சென்று இடையூறும், தடைகளும் ஏற்படுத்தினர். இதனை எதிர்த்து சட்டநிலையிலும், சமூகத் தளத்திலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இதற்கிடையில் கேரள மாநிலத்தில் 1993ஆம் ஆண்டில் ஈழவர் சாதிப் பிரிவை சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்தும் சனாதானிகள் நீதிமன்றம் சென்றனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இருவர் அமர்வு மன்றம் “அர்ச்சகர் பணி நியமனத்திற்கு ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என வற்புறுத்துவது முதன்மைக் கூறாக இருக்க முடியாது’’ எனத் தீர்ப்பில் கூறியது. இதன் பின்னர் 2006 மே 23 முதல்வர் கருணாநிதியின் முன் முயற்சியால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து ஆறு மையங்களில் ஆகம பயிற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் சமுகத்தின் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 240 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். இதில் 209 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் இருவர் மட்டும் மிகச் சிறிய கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு, மீதியுள்ள 207 பேர் அர்ச்சகர் பணி நியமனத்திற்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டப்படி அடுத்த நூறு நாளில் பணி நியமனம் வழங்கப்படும் என்றும், இனிவரும் காலங்களில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை அரசு உறுதி செய்யும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூறியிருப்பதையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. தொடர்ந்து அர்ச்சகர் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதல்வரையும், அரசையும் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT