Published : 09 Jun 2021 11:17 AM
Last Updated : 09 Jun 2021 11:17 AM
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளைக் கிணறு மூலமாக சாகுபடி செய்தவர்கள் தற்பொழுது நெல் அறுவடை செய்யும் நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
''நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்மணிகளை விற்பனை செய்யும்போது, அவர்களிடம் இருந்து 41.500 கிலோ எடையுள்ள நெல் மூட்டைக்கு 40 ரூபாய் தொழிலாளிகள் பெற்று வருகின்றனர். கொள்முதல் நிலையங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு அரசு கூலி தரும்பொழுது இப்படி உபரியாகப் பெறுவது விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கின்றது.
மேலும் நெல் மூட்டைகளை ஒரு வாகனத்தில் ஏற்றி இறக்குவதற்கு 1000 ரூபாய் வரை செலவு ஆகிறது. விவசாயிகள் வரவிற்கு மேல் செலவு செய்து மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்பொழுது மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விவசாயிகள் உழவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய ஆயத்த வேலைகளில் இருக்கின்றனர்.
அதனால் சென்ற ஆண்டு விவசாயிகளின் வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெற்ற கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போதைய அரசு குறுவை சாகுபடி செய்ய மீண்டும் கடன்பெற கிராம நிர்வாக அலுவலர்கள் தாமதம் இன்றி அடங்கல் வழங்கவும், தொடங்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வேளாண் வங்கிகள் மூலமும் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதோடு விவசாயிகள் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு, பயிர் காப்பீடு திட்டத்தை உறுதி செய்ய வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை மானியத்தில் அரசு வழங்க வேண்டும். அதற்கான எளிமையான வழிகாட்டுதலையும், அறிவிப்பையும் வெளியிட வேண்டும்''.
இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT