Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

விவசாய நிலத்துக்கு தண்ணீரை திருடுவதற்காக மோர்தானா கால்வாயை உடைத்து குழாய் பதித்தவர்கள் மீது நடவடிக்கை: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு

கே.வி.குப்பம் அருகேயுள்ள காங்குப்பம் கிராமத்தில் மோர்தானா கால்வாயை உடைத்து குழாய் பதித்த இடத்தை ஆய்வு செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்.

வேலூர்

மோர்தானா கால்வாய் கரையை சேதப்படுத்தி தண்ணீரை திருட குழாய் பதித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தர விட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. எனவே, கோடை கால விவசாயம் மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்காக அணையை திறக்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்து வருகிறது. இம்மாதம் 18-ம் தேதி மோர்தானா அணை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மோர்தானா அணை கால்வாய்களை சீர மைக்கும் பணி சுமார் ரூ.45 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை வரும் 18-ம் தேதிக்கு முன்பாக முடிக்க வேண் டும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள் ளார். மேலும், மோர்தானா கால்வாய்கரையை பல இடங்களில் சேதப் படுத்தி தண்ணீரை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுவுறுத் தியுள்ளார்.

இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கால்வாய் சீரமைப்புப் பணிகளை நேற்று ஆய்வு மேற்கொண்டார். லத்தேரி வழியாக அன்னங்குடி ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய், காங்குப்பம், மேல்மாயில், காளாம்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் வழியாகச் செல்லும் மோர்தானா கால்வாயை ஆய்வு செய்த ஆட்சியர், காங்குப்பம் பகுதியில் கால்வாய் கரையை உடைத்து விவசாய நிலத்துக்கு தண்ணீரை எடுத்துச் செல்ல அமைக்கப்பட்ட இடத்தையும் ஆய்வு செய்தார். பின்னர், கரையை உடைத்து குழாய் பதித்த நபர்கள் குறித்து விசாரித்து உரிய நடவ டிக்கை எடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், மோர்தானா அணையை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பார்வையிட்டார். சுமார் 11.50 மீட்டர் உயரமுள்ள அணையில் தற்போது 11.40 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. தற்போதுள்ள தண்ணீரின் அளவு முழுமையாக இருந்தாலும் சிறிதளவு நீர்வரத்து இருந்தாலும் உபரி நீர் வெளியேறும் அளவுக்கு உள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறும் போது, ‘‘ஆந்திர மாநிலம் கலவ குண்டா அணையில் இருந்து பொன்னை ஆற்றில் 1,000 கன அடி வீதம் நீர்வரத்து உள்ளது. அணையின் மேற்கு பகுதியில் உள்ள கால்வாய் மூலம் 18 ஏரி களுக்கு தண்ணீரை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல், மோர்தானா அணை நீர் பிடிப்புப் பகுதியில் 2 நாட்கள் மழை பெய்தால் உபரிநீர் வெளி யேறும். மோர்தானா அணையின் இடது, வலது கரைகளை தூர்வாரி தடையில்லாமல் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஐஸ்வர்யா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், குணசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x