Published : 08 Jun 2021 05:07 PM
Last Updated : 08 Jun 2021 05:07 PM

நீட் தேர்வு; மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபடும் திமுக அரசு: எல்.முருகன் விமர்சனம்

எல்.முருகன்: கோப்புப்படம்

சென்னை

நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தைக் கலைத்துவிட்டு, மாணவர்களைத் தேர்வுக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என, தமிழக அரசை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, எல்.முருகன் இன்று (ஜூன் 08) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த 2010-ம் ஆண்டுதான் அதுவும் திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது தான், நீட் தேர்வு குறித்த அறிவிப்பு மத்திய அரசின் கெஜட்டில் முதன்முதலில் வெளியானது.

காங்கிரஸ் - திமுக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக, தனியார் மருத்துவமனைகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2013ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 2013ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி மேல்முறையீடு செய்தது. இதே திமுக - காங்கிரஸ் கூட்டணிதான். திமுக - காங்கிரஸ் கூட்டணியின் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை நடத்த வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.

2017ஆம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் ஆளும் கட்சியாக இருந்தபோது நீட் தேர்வைக் கொண்டுவந்த திமுகவும், காங்கிரஸும் எதிர்க்கட்சியாக அதைக் கடுமையாக எதிர்த்தன.

திமுக தலைவர் ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என, வாக்குறுதிகளை அளித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எட்டு மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து இயலாது என்பதை உணர்ந்த திமுகவினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவை மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.

நீட் தேர்வு சமுதாயத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்து திமுக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும்.

2010ஆம் ஆண்டு நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே, அது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், சுமார் 6 ஆண்டுகள் உச்ச நீதிமன்றமும் பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகுதான் நீட் தேர்வு அவசியம் எனத் தீர்ப்பு வழங்கியது.

அதன் பின், முந்தைய அதிமுக அரசும் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

இந்த 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு காரணமாக கிராமப்புற ஏழை, எளிய மக்கள், அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முந்தைய அரசு துணைபுரிந்துள்ளது. இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

இதனைத் தடுப்பதற்கு திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் முயல்கின்றார். இதுதான் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் மீது காட்டும் பரிவா?

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள ஆணையம், செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை வேண்டுமானால் ஆராயலாமே தவிர, நீட் தேர்வை பற்றி எந்த புதிய விஷயத்தையும் கூற முடியாது.

முழுக்க முழுக்க காலத்தைக் கடத்துவதற்கும், மக்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே அமைக்கப்பட்ட ஒரு ஆணையமாக ஏ.கே.ராஜன் ஆணையம் செயல்படப் போகிறது. எனவேதான் மு.க.ஸ்டாலின் இந்த ஆணையத்தை நீட் தேர்வு ரத்து குறித்து ஆராயும் ஆணையம் எனக் கூறாமல், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆராயும் ஆணையம் எனக் கூறியிருக்கிறார்.

வீம்புக்காக தமிழக அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல், நீட் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே, இந்த விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செய்யாமல் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று, தமிழக பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தேவையின்றித் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தைக் கலைத்துவிட்டு மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயார் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும், திமுக அரசை தமிழக பாஜக வலியுறுத்துகிறது".

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x