Published : 08 Jun 2021 03:13 PM
Last Updated : 08 Jun 2021 03:13 PM
கருப்புப் பூஞ்சை என்று தற்போது சொல்லக்கூடிய மியூகோர்மைகோசிஸ் (mucormycosis) நோய்க்கு இந்தியாவில் இதுவரை 9000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தில் 673 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நோய், 90 சதவீதம் கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கே வந்துள்ளது. அதனால், கரோனா நோயாளிகள் மத்தியில் ஒரு பயமும், பீதியும் கிளம்பியுள்ளது.
ஒரு லட்சம் பேருக்கு கரோனா வந்தால் அதில் சில நூறு பேருக்கு மட்டுமே இந்த நோய் வருகிறது. ஆனால், பதறக்கூடிய அளவிற்கு இந்த நோய் பயங்கரமான நோய் கிடையாது. கரோனாவால் இந்த நோய் வருவதில்லை. கரோனா தொற்று இருக்கும்போது வராது.
ஆனால், கரோனா நோயால் பாதிக்கப்பட்டு அதலிருந்து மீண்டவர்களுக்கு அதிகம் வருவதற்கு முக்கிய காரணம், அவர்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். அதற்காக கரோனா தொற்று வந்த அனைவருக்கும் இந்த நோய் வராது. இதில், 90 சதவீதம் கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயாளிகளுக்கே இந்த மியூகோர்மைகோசிஸ் நோய் வருகிறது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.
இதுகுறித்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ கல்வித் துறை தலைமை மருத்துவர் வெங்கடேஷ் பிரஜனா கூறியதாவது:
முதலில் மியூகோர்மைகோசிஸ் பூஞ்சை மூலம் பரவக்கூடிய இந்த நோய் கருப்பு பூஞ்சை நோயே கிடையாது. கருப்பு பூஞ்சை என்பது அது மற்றோரு குடும்பம். அதற்கும், இந்த நோய்க்கும் சம்பந்தமே இல்லை.
அதனால், இந்த நோயை கருப்பு பூஞ்சை என்று அழைப்பதே தவறானது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகள் கருப்பு கலரில் மாறுவதால் கருப்பு பூஞ்சை என்று சொல்கின்றனர்.
மேலும், இந்த நோய் பழங்காலம் முதல் இருக்கக்கூடிய நோய். கரோனா நோயைப் போல் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு இந்த நோய் உறுதியாக பரவாது. ஒரு கதைக்கு 10 துணை கதைகள் சொல்வார்களே அதுபோலே இநு்த நோய் பற்றிய வதந்திகள் மக்களிடம் பரவிக் கொண்டிருக்கிறது.
மியூகோர்மைகோசிஸ் பூஞ்சை நாம் சுவாசிக்கிற காற்றில், இருக்கிற இடத்தில் உள்ளது. ஆனால், நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் இந்த மியூகோர்மைகோசிஸ் பூஞ்சையை எளிதாக அழித்துவிடும்.
ஆனால், சர்க்கரை நோய் கட்டுபாடில்லாமல் சென்று நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது மூக்கு வழியாக கண்ணுக்குபோய் மூளைக்கு செல்கிறது.
இதை ரைனோசெரிபிரலர்பார் மியூக்கோர் என்பார்கள். மற்றொன்று மூக்கு வழியாக நுரையீரல் செல்வதை பல்மனரி மியூகோர் என்று சொல்வார்கள். ஒரு பக்கம் கண்ணத்தில் உணர்வின்மை மற்றும் அதீதவலி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கரண்ட் மாதிரி பாய்கிற வலி. மூக்கடைப்பு, மூக்குவலி, மூக்கு ஒழுகுவது, கண் சிவப்பது, பார்வை இரட்டை இரட்டையாக தெரிவது போன்றவை இதன் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த மியூகோர்மைகோசிஸ் பூஞ்சை கண்ணுக்கு கீழ் உள்ள சைனஸ் கீழ் பரவுகிறது.
சைனசஸ்க்கு மேல் கண் உள்ளது. சைனஸில் இருக்கும்போது கவனிக்காமல் இருந்தால் சைனஸின் மேல் உள்ள எலும்பினை ஊடுறுவி கண்ணுக்கு சென்றுவிடுகிறது. கண்ணை தாண்டினால் மூளைக்கு சென்றுவிடுகிறது. மூளைக்கு சென்றால் மட்டுமே இந்த நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும். உயிருக்கு ஆபத்தாகிவிடுகிறது.
மற்றப்படி ஆரம்பத்திலேயே இந்த நோயைக் கண்டறிந்தால் சிகிச்சை அளிப்பது மிக எளிது. அறிகுறி தெரிந்தவுடன் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை பார்த்து பரிசோதனை செய்தால் எண்டோஸ்கோபி மூலம் அரைமணி நேரத்தில் அதன் பாதிப்பை அறிந்துவிடலாம். சைனஸில் இருக்கிற பூஞ்சையை அகற்றி அதில் லிப்போசோமால் ஆம்போடெரிசின் (liposomal amphotericin) மருந்து போட்டால் குணமடையும்.
இதற்கு பெரிய அறுவை சிகிச்சை எல்லாம் தேவையில்லை. 2 முதல் 3 வாரங்களில் முழுமையாக குணப்படுத்திவிடலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கவிட்டால் அது மீண்டும் வளர்வதற்கான வாய்ப்புள்ளது. கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோயாளிகள் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும்.
சாதாரண சர்க்கரை நோயாளிகள், மற்றவர்கள் இந்த நோயை பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. சில சமயங்களில் தற்போது மியூகோர்மைகோசிஸ் இளைஞர்களுக்கும் கண்டறியப்படுகிறது.
ஆய்வில் அவர்களுக்குமே அவர்களை அறியாமல் சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக இருந்து இந்த நோய் வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT