Published : 08 Jun 2021 02:53 PM
Last Updated : 08 Jun 2021 02:53 PM

பேரிடர்க் காலங்களில் ஆபத்து; தகவல் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவிப்பு

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்: கோப்புப்படம்

சென்னை

பேரிடர்க் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஆபத்துகள் குறித்தான தகவல்களைத் தெரிவிக்க தனி வாட்ஸ் அப் எண் வெளியிடப்படுள்ளது என, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று (ஜூன் 08) வெளியிட்ட அறிக்கை:

"பேரிடர்க் காலங்களில், பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்குப் பேரிடர் குறித்தான தகவல்களைக் குறித்த நேரத்தில் தெரியப்படுத்தும் ஒரு அமைப்பு முறையினை உருவாக்குவது மிக முக்கியமானதாகும். இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய தேசிய கடல்சார் தகவல் மையம், மத்திய நீர்வள ஆணையம் போன்ற அமைப்புகளிடமிருந்து பெறப்படும் கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடர்கள் குறித்தான எச்சரிக்கைத் தகவல்கள் TNSMART செயலி மூலமும், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பேரிடர்கள் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஏதுவாக, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், படம் எடுத்து அனுப்பும் வகையிலும் 24 மணி நேரமும் இயங்கும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனிப்பட்ட வாட்ஸ் அப் எண் 94458 69848 தொடங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் வரப்பெறும் பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் தொடர்புடைய அலுவலர்கள் / துறைகளுக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது மட்டுமின்றி, பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்து தகவல்கள் தெரிவிக்க ஏதுவாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் மக்கள் களம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை தகவல்களை மேற்படி வாட்ஸ் அப் எண் மூலமாகவும், இணையதளம் வாயிலாகவும் தெரிவிக்கலாம்.

சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், தகவல் தொடர்பு மையமாக 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுகின்றது. பேரிடர்க் காலங்களில், வருவாய் நிர்வாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட இதர முக்கியத் துறைகளின் மூத்த அதிகாரிகளின் துணையோடு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்பட்டு, முன்னெச்சரிக்கைத் தகவல்களை மிகத் துரிதமாக அனுப்புகின்றது.

பொதுமக்கள் 1070 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி மூலம் இம்மையத்தினைத் தொடர்பு கொண்டு பேரிடர் அபாயம் தொடர்பான தகவல்களைத் தெரிவிக்க இயலும். இதுமட்டுமின்றி, பொதுமக்கள் பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைத் தகவல்களை உடனுக்குடன் அனுப்ப TNSMART செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் அரபிக் கடலில் உருவான 'டவ்-தே' புயலின் காரணமாக கனமழை முதல் மிக கனமழை ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் முன்கூட்டியே ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். தமிழக அரசு முன்கூட்டியே மேற்கொண்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சேதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், வடக்கு அந்தமான் கடல் மற்றும் கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான 'யாஸ்' புயலின் காரணமாக மாவட்ட நிர்வாகத்தைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், பாதிப்புக்குள்ளாகும் எனக் கண்டறியப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து, உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்குமாறும் அனைத்து உயர் அலுவலர்களுக்கு முதல்வர் ஆணையிட்டார்.

இதன் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் முன்கூட்டியே தங்கவைக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

முதல்வர் உத்தரவின் பேரில் 'யாஸ்' புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக என்னையும், தொழில்நுட்பத் துறை அமைச்சரையும் அனுப்பி வைத்து, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்றன.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான மக்களின் துயர் துடைக்கும் வகையில், பேரிடர் நிவாரண நிதியின் கீழ், சேதமடைந்த கூரை வீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும், மானாவரி மற்றும் நீர்ப்பாசனம் பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்ப்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும், மானவரி நெற்பயிர் தவிர, அனைத்து மானவரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரமும், பல்லாண்டு கால பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரமும், வழங்கிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இடி மற்றும் மின்னல் காரணமாக பெரும்பாலும் திறந்த வயல்வெளியில் உள்ளவர்கள் உயிரிழப்பதால், இடி மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்குடன், தமிழ்நாடு அரசு, புனேவில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இடி மற்றும் மின்னலின் தாக்கம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே பெறப்பட்டு, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தாமினி செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்களுக்கு, தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 40 கிலோ மீட்டர் சுற்றளவில் இடி மற்றும் மின்னலின் தாக்கம் குறித்து 45 நிமிடங்களுக்கு முன்னர் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இடி மற்றும் மின்னலின் தாக்கம் குறித்துப் பொதுமக்களுக்குத் தகவல் கிடைக்கப் பெறுவதால், இடி மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறைய வாய்ப்புள்ளது.

பேரிடர்க் காலங்களில், பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பேரிடர் ஆபத்துகள் குறித்தான தகவல்களை பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென தனி வாட்ஸ் அப் எண். 94458 69848 மூலமாகவும், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள மக்கள் களம் வாயிலாகவும் புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x