Published : 08 Jun 2021 01:02 PM
Last Updated : 08 Jun 2021 01:02 PM

முதுமலை வளர்ப்பு யானைகளுக்கு கரோனா பரிசோதனை

யானைக்கு கரோனா பரிசோதனை.

முதுமலை

முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்படும் என, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் தெரிவித்தார்.

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 13 ஆசிய சிங்கங்களுக்கு கரோனா அறிகுறிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. சில சிங்கங்களுக்கு அறிகுறிகள் தென்பட்டதுடன், நீலா என்ற 9 வயதுள்ள பெண் சிங்கம் உயிரிழந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் முதுமலை, டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாம்களில் உள்ள யானைகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என, வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானை முகாமில் உள்ள 28 யானைகளுக்கு கரோனா பரிசோதனை இன்று (ஜூன் 08) காலை தொடங்கியது.

முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் வனத்துறையினர் யானைகளின் தும்பிக்கையிலிருந்து சளி மாதிரிகளைச் சேகரித்தனர்.

முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் கூறும்போது, "முதுமலையில் உள்ள 28 யானைகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் உத்தரப் பிரதேசம் இஜத் நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு கரோனா பரிசோதனை செய்யப்படும். இந்தப் பரிசோதனையில் யானைகளை கரோனா தாக்கியுள்ளதா என்பது தெரியவரும். மாதிரிகள் இன்றே உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பப்படும்.

மேலும், வனத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் பணிபுரியும் 52 பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

யானைகளுக்கு உணவு வழங்கும் நேரம் தவிர பிற நேரங்களில் யானைகள் தனித்தனியாகப் பராமரிக்கப்படும். மேலும், பாகன்கள் மற்றும் பிற ஊழியர்களின் உடல் தட்பவெட்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே முகாமுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்" என்றார்.

கால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார் கூறும்போது, "சிங்கம், புலி போன்ற பூனை வகை விலங்குகளுக்கு மட்டும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. யானைகளுக்குப் பரவியதாக இதுவரை தகவல் இல்லை. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே யானைகளுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும்" என்றார்.

வண்டலூரில் சிங்கங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, முதுமலையில் உள்ள யானைகள் முகாமில் வனத்துறையினர் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் தூய்மைப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x