Published : 08 Jun 2021 10:57 AM
Last Updated : 08 Jun 2021 10:57 AM

மது கிடைக்காத விரக்தியில் தின்னரை குடித்தவர் பலி

சென்னை

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் எல்க்ட்ரீஷியன் ஒருவர் மது கிடைக்காத விரக்தியில் பெயிண்டுக்கு சேர்க்கும் தின்னரை குடித்து வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் நிலையில் உயிரிழந்தார்.

தமிழக அரசு கரோனா 2 ஆம் அலைப்பரவலை அடுத்து ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. நேற்று முதல் மீண்டும் ஒருவார ஊரடங்கை தளர்வுகளுடன் அமல்படுத்தியது. பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாமல் இருக்க காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு அனுமதித்துள்ளது.

சுய தொழில் செய்வோருக்கும் அனுமதி அளித்துள்ளது. சலூன்கள், ஷாப்பிங் மால்கள், மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. அதே நேரம் மதுபானங்களை சமூக விரோதிகள் கடத்தி வந்து விற்பனை செய்வதும் நடக்கிறது. மதுபான பிரியர்கள் போதைக்கு அடிமையானவர்கள் மதுவுக்கு பதில் சானிடைசர் போன்றவற்றை குடித்து உயிரிழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கிறது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பெயிண்டர் ஒருவர் மது கிடைக்காததால் பெயிண்டுக்கு சேர்க்கப்படும் தின்னரை குடித்து உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் குட்டித்தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (48).

எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். மது போதைக்கு அடிமையானவர். நேற்று மாலை மது கிடைக்காத ஆதங்கத்தில் வீட்டிலிருந்த ஐபிஏ தின்னரை குடித்ததாக கூறப்படுகிறது. அதனால் இரவு வயிற்றில் வலி ஏற்பட்டு துடித்துள்ளார். உடனடியாக அவரை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல் நிலை மோசமாக இருக்கவே மேல் சிகிச்சைக்காக இரவு 12:45 மணியளவில் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.

அங்கு அனுமதிக்க சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதை அறிந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கேஎம்சி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x