Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM
முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இலவசசிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் மருத்துவமனை கட்டணத்தை முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, “அதிதீவிர மற்றும் அதிதீவிரமில்லாத அனைத்து நோயாளிகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஆகும் செலவுகள் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்படும்.
தேவையான மருந்துகள் மற்றும் அனைத்து பரிசோதனைகளுக்குமான கூடுதல் கட்டணம், பயனாளிகள் சார்பில் மருத்துவக் காப்பீடு நிறுவனம் மூலம் மருத்துவமனைக்கு நேரடியாக வழங்கப்படும்” என அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், பல தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் நோயாளிகளை அனுமதிப்பதில்லை என புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக கடந்த மே 24-ம் தேதி ‘இந்து தமிழ்' இணையதளத்தில் விரிவான செய்தி வெளியானது. அதில், “முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை வெளிப்படையாக தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து ‘இந்து தமிழ்' நாளிதழில் கடந்த 4-ம் தேதி முதல்வரின் காப்பீட்டு திட்டம் தொடர்பாக வெளியான செய்தியில், “காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கையை தினந்தோறும்வெளியிடப்படும் ஊடக அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
20 மருத்துவமனைகளில் சிகிச்சை
இந்நிலையில், கோவை மாவட்டஆட்சியர் அலுவலகம் மூலம் நேற்றுமுன்தினம் (மே 6) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்கள் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளன.
அதில், “கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில், 71பேருக்கு முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவுடன் காப்பீட்டு அட்டை, ஆவணங்களின் நகல்களை சமர்ப்பித்து தரமான இலவச சிகிச்சை பெறலாம்.
இதுதொடர்பான சந்தேகங்கள், புகார்களுக்கு கட்டுப்பாட்டுஅறையை 0422 -1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கோவையில் எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில் எவ்வளவு பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்ற பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்தம்20 மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT