Published : 08 Jun 2021 03:15 AM
Last Updated : 08 Jun 2021 03:15 AM

ஆவின் பால் பவுடர் தொழிற்சாலையில் தனி நபர் ஒப்பந்தம் மூலம் தொழிலாளர்களை பணி அமர்த்த எதிர்ப்பு: வாழ்வாதாரம் பறிபோகும் என ஆட்சியரிடம் தொழிலாளர்கள் வேதனை

தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு கொடுக்க வந்த அம்மாபாளையம் பால் பவுடர் தொழிற்சாலையில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்கள்.

திருவண்ணாமலை

ஆவின் பால் பவுடர் தொழிற் சாலையில் தனி நபர் ஒப்பந்தம் மூலம் தினக்கூலி தொழிலாளர்கள் நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தி.மலை மாவட்டம் செங்கம் வட்டம் அம்மாபாளையம் கிராமத் தில் ஆவின் பால் பவுடர் தொழிற் சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், நிர்வாகத்தின் மேற்பார்வையில் தினக்கூலி அடிப்படையில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தனி நபர் ஒப்பந்தம் மூலமாக தினக்கூலி அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், குறைந்தளவு கூலி மற்றும் நிர்வாகம் வழங்கும் சலுகைகள் பறிபோகும் எனக் கூறி, தனி நபருக்கு ஒப்பந்தம் விடும் முடிவை கைவிட வேண்டும் என, தற்போது தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் தமிழக அரசு, ஆவின் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தி.மலை ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம், தினக்கூலி தொழிலாளர்கள் நேற்று மனு அளித்துள்ளனர். பின்னர் அவர் கள் கூறும்போது, “அம்மாபாளை யத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தினக்கூலி அடிப்படையில் 495 தொழிலாளர் கள் பணியாற்றினர். 8 மணி நேர பணிக்கு ரூ.325 கூலித் தொகை வழங்கப்படுகிறது.

கூலி குறைவாக உள்ளதால், நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள், பிற தொழிலை தேடி சென்றுவிட்டனர். தற்போது, சுமார் 300 தொழிலாளர்கள் பணியாற்று கின்றனர். மாதம் 25 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஆனால், எங்க ளுக்கு 15 முதல் 18 நாட்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது.

8 மணி நேரம் பணி என தொழிலாளர் சட்டத்தில் உள்ளது. ஆனால், எங்களிடம் கூடுதல் நேரத்துக்கு பணி செய்யுமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர். அவ்வாறு செய்யவில்லை என்றால், பணி நாட்களை குறைப்பது அல்லது பணியில் இருந்து நீக்குவது போன்ற செயல்களில் நிர்வாகம் ஈடுபடுகிறது. கரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணி செய்து வருகிறோம். எங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க மறுக் கின்றனர். நிரந்தர தொழிலாளர் களை பாதுகாப்பாக வாகனம் மூலம் அழைத்து செல்கின்றனர். நாங்கள் சொந்த செலவில் இரு சக்கர வாகனங்களில் செல்கிறோம். எனவே, தினக்கூலி தொழிலாளர்களுக்கும் வாகன வசதி செய்து கொடுக்க வலியுறுத் தியும் பலனில்லை.

இந்நிலையில் தனி நபர் ஒப்பந்தம் மூலமாக தினக்கூலி தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் முடிவுக்கு நிர்வாகம் வந்துவிட்டது. தற்போது பெற்று வரும் ரூ.325 கூலிக்கூட கிடைக்காது. ரூ.200-க்கு கூலி வேலை செய்ய ஆட்கள் தயாராக உள்ளதாக கூறி வருகின்றனர். இதனால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

ஆவின் பால் பவுடர் தொழிற் சாலையை நம்பி வாழ்ந்துவரும் தொழிலாளர்களின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். எங்களது பிள்ளைகளின் கல்வியும் பறிபோய்விடும். நீர் ஆதாரம் இல்லாததால் விவசாய தொழிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடோடிகளாக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. எனவே, தனி நபர் ஒப்பந்தம் என்ற முடிவை கைவிட்டு, தொழிலாளர்களின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x