Published : 07 Jun 2021 09:41 PM
Last Updated : 07 Jun 2021 09:41 PM
மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நிலையில், அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கும் எனக் கூறினார்.
தடுப்பூசியை வாங்குவது உள்ளிட்டவற்றை நாங்களும் செய்கிறோம் என சில மாநில அரசுகள் வலியுறுத்தின. மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையில் சில மாநிலங்களுக்கு மாற்று கருத்து இருந்தன.
தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என மாநிலங்கள் கோரின. இதனையடுத்து அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது அதில் உள்ள சிக்கல்களை மாநில அரசுகள் உணர்ந்து விட்டன. தற்போது மத்திய அரசே இதனை செய்யட்டும் என்று அந்த மாநில அரசுகள் கூறுகின்றன.
இதனால் மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு வாங்கி மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும் எனப் பிரதமர் கூறினார்.
இந்நிலையில், பிரதமரின் அறிவிப்பை வரவேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், "நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 75% தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசு தனது கொள்கையை மாற்றிக்கொண்டிருப்பதை நான் வரவேற்கிறேன்.
I welcome the @PMOIndia's statement indicating that the Union Government will procure 75% of the vaccines produced in the country and provide them to the states free of cost. I also appreciate the Prime Minister for reversing his government's previous position.
— M.K.Stalin (@mkstalin) June 7, 2021
பிரதமர் மோடி தனது உரையில் பலமுறை சுகாதாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறியுள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசி திட்டத்திற்கு பதிவு செய்தல், நிர்வகித்தல் போன்றவற்றிற்கும் உரிய முழுமையான அனுமதியை அளிக்க வேண்டும்" என்று முதல்வர் ட்வீட் செய்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT