Published : 07 Jun 2021 09:15 PM
Last Updated : 07 Jun 2021 09:15 PM
தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் கேட்பதாக புகார் வந்தநிலையில், பாதிக்கப்பட்டவர் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற கோவை மாவட்ட கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி உதவி செய்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் அருகில் உள்ள தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா. கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மே 24-ம் தேதி திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அனுமதிக்கும்போது, சிகிச்சைக்கான செலவு இரண்டரை லட்சம் வரை ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். பின்னர், சிகிச்சைக்காக ரூ.2.60 லட்சம் கட்டியுள்ளனர்.
இதுதவிர, கூடுதலாக ரூ.3.09 லட்சம் கேட்டுள்ளனர். அந்த பணத்தை கட்டினால் மட்டுமே கவிதாவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
செய்வதறியாது தவித்த கவிதாவின் மகள் கோமதி, கோவை மாவட்ட கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான எம்.ஏ.சித்திகை இன்று (மே 7)தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.
அப்போது, நோயாளிக்கு முதல்வரின் காப்பீட்டு திட்ட அட்டை இருக்கிறதா என்பதை கேட்டறிந்த சித்திக், காப்பீட்டு திட்ட அலுவலரை தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.
பின்னர், தேவையான ஆவணங்கள் பெறப்பட்டு, காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, பிரச்சினை முடித்துவைக்கப்பட்டது.
மற்றொரு தனியார் மருத்துவமனை மீது புகார்:
கோவை சிட்ரா பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார் (54). கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், சுங்கம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 29-ம் தேதி அனுமதிக்கபட்டார்.
முதல்நாள் சிகிச்சைக் கட்டணமாக ரூ.60 ஆயிரம் வசூலித்த மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சை பெறும் ஒவ்வொரு நாட்களுக்கும் ரூ.40 ஆயிரம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அதிகக் கட்டணம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில்,நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கபட்டது தொடர்பாக மோகன்குமாரின் சகோதரர் மகாலிங்கம், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (மே 7) மனு அளித்தார்.
ஏற்கெனவே இதே மருத்துவமனையின் மீது எழுந்த புகார் மீதான விசாரணை நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT