Last Updated : 07 Jun, 2021 05:55 PM

 

Published : 07 Jun 2021 05:55 PM
Last Updated : 07 Jun 2021 05:55 PM

கரோனாவால் பாதிக்கப்படும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆம்புலன்ஸ்: அரசுப் பேருந்து ஓட்டுநர் வழங்கினார்

ஓட்டுநர் ரங்கநாதன் | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

கரோனாவால் பாதிக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தை அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் வழங்கியுள்ளார்.

மதுரை ஒத்தக்கடை அருகே ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் ம.ரங்கநாதன். இவர் அரசு போக்குவரத்துக் கழகம், காரைக்குடி மண்டலத்துக்கு உட்பட்ட கமுதி கிளையில் 15 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் நலம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

இந்த அறக்கட்டளை சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தை கரோனா தொற்றுக்கு ஆளாகும் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை இலவசமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல இன்று வழங்கினார். ஆம்புலன்ஸ் வாகனத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஓட்டுநர் ரங்கநாதன் கூறுகையில், ''சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்துத் தொழிலாளர் ஒருவர் கரோனாவால் உயிரிழந்தார். அவரது உடலை எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. இதுபோன்ற பாதிப்பு வேறு எந்த போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் வரக் கூடாது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம், மகன், மகளுடன் கரோனா நிவாரண நிதி வழங்கும் ஓட்டுநர் ரங்கநாதன்

இதற்காக ரூ.3 லட்சம் செலவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டது. இந்த வாகனம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். இதனைப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று தெரிவித்தார்.

அத்துடன் ஓட்டுநர் ரங்கநாதனின் மகள் ஜீவிதா சர்மி, மகன் ரஞ்சித்குமார் ஆகியோர் தங்களின் சேமிப்புப் பணம் ரூ.3020-ஐத் தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x