Published : 07 Jun 2021 04:38 PM
Last Updated : 07 Jun 2021 04:38 PM
காரைக்கால் மாவட்டத்தில் 18லிருந்து 45 வயதுக்குட்பட்டோருக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால், 18 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மையத்தில் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்நிலையில் இதன் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும், குறைந்தபட்சம் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒன்று என்ற அடிப்படையிலாவது தடுப்பூசி மையம் அமைக்கப்பட வேண்டும் எனவும், தடுப்பூசி போட்டுக்கொள்ள நாளொன்றுக்கு அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று (ஜூன் 7) முதல் நெடுங்காடு, திருநள்ளாறு, கோட்டுச்சேரி, திருமலைராயன்பட்டினம் ஆகிய பகுதிகளிலும் 18லிருந்து 45 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
திருமலைராயன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி போடும் பணியை நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.நாக தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் கே.மோகன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் கே.மோகன்ராஜ் கூறுகையில், "காரைக்கால் மாவட்டத்தில் கடலோரத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களில் நாளை (ஜூன் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 45 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள், சுய உதவிக் குழுவினர், மீன்வளத் துறையினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், 18லிருந்து 45 வயதுக்குட்பட்டோருக்கு நாளொன்றுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT