Published : 07 Jun 2021 01:51 PM
Last Updated : 07 Jun 2021 01:51 PM

கருவாடு கூட மீன் ஆகலாம்; சசிகலா ஒருநாளும் அதிமுகவுக்குள் வர முடியாது: சி.வி.சண்முகம் ஆவேசம்

விழுப்புரம்

''கருவாடு மீனாகிவிட முடியாது என்று காளிமுத்து சொன்னார். ஆனால், கருவாடு கூட மீனாகிவிடலாம். சசிகலா ஒருநாளும் அதிமுகவுக்குள் வர முடியாது. ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது'' என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாகக் கூறினார்.

அதிமுக தேர்தல் தோல்விக்குப் பின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இறுதியில் இபிஎஸ் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அதிமுகவுக்குள் தலைவர்களிடையே ஒற்றுமையில்லை என்கிற செய்தி வெளியாகும் நிலையில், சசிகலா திடீர் திடீர் எனத் தொண்டர்களுடன் பேசி ஆடியோ வெளியிட்டு வருகிறார். இது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா தொண்டர்களிடம் பேசும்போது, ''நான் விரைவில் வந்துவிடுவேன். அனைத்தையும் சரி செய்துவிடலாம்'' என்று பேசிவருவதால் அதிமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலாவின் ஆடியோவை முதலில் கண்டித்து கே.பி.முனுசாமி பேட்டி அளித்தார்.

பின்னர் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்தபோது, ''சசிகலா எந்நாளும் அதிமுகவுக்குள் வர முடியாது. அவர் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று முன்னரே சொல்லிவிட்டார்’’ என்று தெரிவித்தார்.

இதற்குப் பின்னரும் ஆடியோ வெளியிட்ட சசிகலா, அனைத்தையும் மாற்றுவேன் எனப் பேசிவருகிறார். இந்நிலையில் விழுப்புரத்தில் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சசிகலா ஆடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த ஆவேச பதில்:

''இந்த இயக்கத்தில் சசிகலா எங்கே இருந்தார் என்பதே தெரியாது. அவருக்கும், அதிமுகவின் சரித்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவர் ஜெயலலிதாவின் வீட்டிலே, அவருக்கு உதவியாளராக வந்தார். அவ்வளவுதான். அவருக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவர் இப்போது என்ன வேஷம் போட்டாலும், என்ன நாடகம் போட்டாலும் எதுவும் நடக்காது. எங்கள் மூத்தவர் காளிமுத்து, கருவாடு மீன் ஆகாது என்று சொன்னார். இது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த வசனம். கருவாடு கூட மீனாகிவிடலாம். ஆனால், அதிமுகவில் சசிகலா ஒருநாளும் உறுப்பினராக முடியாது.

ஒன்றரைக் கோடி அதிமுக தொண்டர்கள் இருக்கும் வரை யாராலும் இந்த இயக்கத்தை அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. ஒரு சசிகலா அல்ல ஆயிரம் சசிகலா வந்தாலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது”.

இவ்வாறு சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x