Published : 07 Jun 2021 01:15 PM
Last Updated : 07 Jun 2021 01:15 PM

தத்ரூப ஓவியர் இளையராஜா மரணம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ஓவியர் இளையராஜா | கோப்புப் படம்.

இந்திய அளவில் மிக பிரபலமான ஓவியரான இளையராஜா கரோனா தொற்றால் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 43. இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிராமியப் பெண்களின் தத்ரூபமான ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த இளையராஜா. இவரது ஓவியங்கள் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலகின் பிரபலமான ஓவியக் கண்காட்சிகளில் இடம்பெற்று பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

வளரும் இளம் ஓவியக் கலைஞர்களுக்கு நம்பிக்கை உதராணமாக இருந்த இளையராஜா, சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் இளையராஜா உயிரிழந்தார்.

இளையராஜாவின் மறைவுக்கு திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், வாசகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், “தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் இளையராஜாவின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்!” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மறைந்த ஓவியர் இளையராஜா, தனது ஓவியங்களுக்கு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர். 2009ஆம் ஆண்டு திராவிடப் பெண்கள் என்ற தலைப்பில் அவர் நடத்திய ஓவியக் கண்காட்சி மிகவும் பிரபலம்.

இளையராஜாவின் ஓவியங்களை இப்பக்கத்தில் காணலாம்:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x